×

3 மாதங்களில் 20 பேர் சாவு உயிர் பலி வாங்கிவரும் பாறைக்குழிகளை மூட வலியுறுத்தல்

திருப்பூர், ஏப்.30:திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பாறைக்குழிகளில் குளிக்க செல்லும் மாணவர்கள், போதை வாலிபர்கள் மூழ்கி இறப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பாறைக்குழிகளை மூட  வேண்டும் மக்கள் விழிப்புணர்வு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் 8 லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்க்கின்றனர். இங்கு வசதியானவர்கள் கோடை விடுமுறையை கழிக்க பல்வேறு சுற்றுலாதலங்களுக்கு செல்கின்றனர், ஏழை, எளிய பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுமுறை நாட்களில் பாறைக்குழிகளுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். கல்லாங்காடு,ரேவதி நகர், வெள்ளியங்காடு, கரைப்புதுார், அருள்புரம், பிச்சம்பாளையம், ஓடக்காடு, திருக்குமரன் நகர் மற்றும் ஊத்துக்குளி, பெருமாநல்லுார், திருமுருகன்பூண்டி, மங்கலம் உட்பட 20 க்கு மேற்பட்ட இடங்களில் பாறைக்குழிகள் உள்ளன. இவற்றில் மழை நீர் மாதக்கணக்கில் தேங்கி நிற்கிறது. இவற்றில் விடுமுறை நாட்களில் மாணவர்கள் குளித்து மகிழ்கின்றனர்.ஒரு சிலர் நீச்சல் பழகுகின்றனர். பாறைக்குழிகளுக்கு செல்வோர் பெரும்பாலும் நீச்சல் தெரியாதவர்களே அதிகளவு செல்கின்றனர். பாறைக்குழியின் ஆழம் மற்றும் சேறும் சகதியுமாக இருப்பது  யாருக்கும்  தெரியாததால் ஒரு சிலர் தண்ணீரில் மூழ்கி இறக்கின்றனர். கடந்த  3 மாதங்களில் 20க்கு மேற்பட்டோர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். தற்கொலை செய்வோரும் பாறைக்குழிகளில் விழுந்து இறக்கின்றனர். இது குறித்து மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தில் செயலாளர் தமிழ்மணி கூறியதாவது.

திருப்பூர் மாநகரில் குடும்பத்துடன் பொழுதை கழிக்க எந்த இடமும் இல்லை. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மதுபிரியர்கள், மனம் விரக்தியடைந்தோர் பாறைக்குழிகளில் விழுந்து தற்கொலை செய்கின்றனர். மாநகராட்சி ஆண்டுதோறும் ரூ. 650 கோடி வருவாய் உள்ள நிலையில் 60 வார்டுகளில் பொது உபயோகத்திற்காக ரிசர்வ் சைட் ஏராளமாக உள்ளது. இந்த இடங்களில்  பார்க் வசதியுடன்,  நீச்சல் குளங்களை  அமைத்து சிறுவர்கள், பள்ளி, கலலுாரி மாணவர்களை விளையாட அனுமதிக்க வேண்டும்.இது குறித்து முன்னாள் முதல்வர்களிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த கோரிக்கை நிறைவேற்ற மாநகராட்சியிடம் போதிய நிதி இருப்பு கம்பிவேலி அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்த வேண்டுமென  அறிவுறுத்தினர். இதைதொடர்ந்து  ஒருசில பாறைக்குழிகளுக்கு மட்டும் கம்பி வேலி போடப்பட்டுள்ளது. பெரும்பாலான பாறைக்குழிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை. இதனால், உயிர்பலிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பாறைக்குழிகளை  மூடி உயிர் பலிகளை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : deaths ,
× RELATED 10 ஆண்டுகளில் 4.25 லட்சம் பேர் தற்கொலை:...