×

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முன்பு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம்

செங்கல்பட்டு, ஏப்.30: செங்கல்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் விபத்து ஏற்பட்டால் 108 ஆம்புலன்ஸ் மூலம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்து சென்று சிகிச்சை அளிப்பது வழக்கம். அதேபோன்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை, மேல் சிகிச்சைக்காக சென்னை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லவும் 108 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 12 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. ஒரு ஆம்புலன்சில் ஒரு மருத்துவ உதவியாளர் உள்பட 3 பேர் பணியில் உள்ளனர். இந்நிலையில், நேற்று காைல நோயாளி ஒருவரை 108 ஆம்புலன்சில், சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக ஊழியர்கள் தயார் ஆனார்கள். அப்போது, தனியார் ஆம்புலன்ஸ் ஊழியர் பாலு என்பவர், 108 ஆம்புலன்ஸ் பெண் ஊழியரிடம், ‘நோயாளியை ஏற்றி செல்வதற்காக நான் பேசியுள்ளேன். நீங்கள் எப்படி ஏற்றி செல்லலாம்’ என கேட்டுள்ளார்.

அதற்கு, அந்த பெண் ஊழியர், அரசு ஆம்புலன்சில் சென்றால் இலவசம், அதனால் எங்களை அழைத்து போக சொன்னார்கள் என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தனியார் ஆம்புலன்ஸ் ஊழியர், பெண் ஊழியரை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், தனியார் ஆம்புலன்ஸ் ஊழியரை கண்டித்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை நுழைவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து செங்கல்பட்டு டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், மருத்துவமனை உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம், பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, தனியார் ஆம்புலன்ஸ் ஊழியர், 108 ஆம்புலன்ஸ் ஊழியரிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் மன்னிப்பு கடிதமும் எழுதி கொடுத்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Ambulance Staff Strike ,Chengalpattu Government Hospital ,
× RELATED 4 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து...