×

குமரி மாவட்டத்தில் அங்கீகாரமின்றி செயல்படும் சிபிஎஸ்இ பள்ளிகள் பட்டியலை வெளியிடுமா கல்வித்துறை?

நாகர்கோவில், ஏப். 30:  குமரி மாவட்டத்தில் அங்கீகாரமின்றி செயல்படும் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடர்பான பட்டியலை கல்வித்துறை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. குழந்ைதகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளும் அங்கீகாரம் பெற்றே செயல்பட வேண்டும். அங்கீகாரமின்றி எந்தவொரு பள்ளியும் செயல்படவில்லை என்பதை முதன்மை கல்வி அலுவலர் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வி இயக்குநரகத்தால் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாநில பாட திட்டம், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ போன்ற வாரியங்களில் இணைப்பு பெற்றுள்ள பள்ளிகள் அனைத்தும் மாநில அரசின் அங்கீகாரமும் பெற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளி கல்வி இயக்குநருக்கு அனுப்பி வைத்திருந்தனர். ஆனாலும் குமரி மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் அங்கீகாரமின்றி செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் இந்த பள்ளிகளில் பயில்கின்ற மாணவர்களின் கல்வி சான்றிதழ் தகுதியற்றதாக போகும் நிலை, குழந்தைகளின் பாதுகாப்பு போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது.

கட்டாய கல்வி உரிமை சட்டத்தை மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்துகின்ற பணியில் மாவட்ட தொடர்பு அலுவலர்களாக முதன்மை கல்வி அலுவலர்களே உள்ளனர். ஆனால் முதன்மை கல்வி அலுவலர்கள் இதனை கண்டுகொள்வது இல்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் அரசு உதவி பெறும், அரசு உதவி பெறாத உயர்நிலை மேல்நிலை பள்ளிகள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ போன்ற வாரியங்களில் இணைப்பு பெற்ற பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு நேரில் சென்று அங்கீகார ஆணையை கோரி பெற வேண்டும். இந்த பணிகளை வட்டார கல்வி அலுவலர் மேற்கொள்ள வேண்டும். அங்கீகார ஆணையை முன்னிலைப்படுத்தாத பள்ளிகளின் பட்டியலை தயார் செய்து கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த பள்ளிகள் தவிர தங்களது கல்வி மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் வேறு ஏதும் இல்லை என்று வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் சான்றளிக்க வேண்டும். இதனை ஏப்ரல் 23க்குள் முடிக்க வேண்டும்.  அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் விபரத்தை முதன்மை கல்வி அலுவலர்கள் செய்திதாள்கள் வாயிலாக பொதுமக்கள் அறியும் வகையில் செய்தியாக வெளியிட வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் அறிவித்திருந்தார். 2019-20 கல்வியாண்டு தொடங்கும்போது அந்தந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் என்பதையும், குழந்தைகள் அங்கீகாரம் உள்ள பள்ளிகளில் கல்வி பயில்கின்றனர் என்பதையும் முதன்மை கல்வி அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் பள்ளி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

அங்கீகாரமற்ற பள்ளிகள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள தவறி அதனால் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி நலனுக்கு ஆபத்து ஏற்படும் தருவாயில் சம்பந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மே மாதம் 29ம் தேதிக்குள் பள்ளி கல்வி இயக்கத்திற்கு அனுப்ப  வேண்டும். மேலும் இந்த பள்ளி அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளி என்று பள்ளிகளின் முகப்பில் தகவலை ஒட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் உள்பட சில இடங்களில் சிபிஎஸ்இ போர்டின் அனுமதியின்றி பள்ளிகள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தேர்வு நேர தில்லுமுல்லு
இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை கேட்டுபெற்ற நாகர்கோவிலை சேர்ந்த சிவா என்பவர் கூறுகையில், ‘நாகர்கோவிலில் டிரஸ்ட் ஒன்றின் கீழ் செயல்படுகின்ற இருபாலர் பள்ளி பிரி கேஜி முதல் 10ம் வகுப்பு வரை வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். சிபிஎஸ்இ பள்ளி அதற்கான போர்டு அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதற்கான அனுமதி இதுவரை பெறப்படவில்லை. இது தொடர்பாக சென்னையில் உள்ள மண்டல அலுவலகம் வாயிலாக தகவல் உரிமை சட்டம் மூலம் தகவல் பெறப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலமும் அப்பள்ளி அங்கீகாரம் ஏதும் பெறவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு காலங்களில் இப்பள்ளி மாணவர்களை வேறு பள்ளியில் பயின்றது போன்று தேர்வு எழுதி சான்றிதழ் வழங்குகின்றனர். கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தெரிந்ததே இதுபோன்ற மோசடிகள் நடைபெறுகிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்
குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் இது தொடர்பாக அளித்த விளக்கத்தில், ‘குமரி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ போன்ற இதர வாரியப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகள் அங்கீகாரம் பெற்ற விவரத்தை பள்ளி அறிவிப்பு பலகையில் பெற்றோர் அறியும் வண்ணம் அங்கீகார ஆணை எண், நாள், அங்கீகாரம் வழங்கப்பட்ட காலம் ஆகியவற்றை குறிப்பிட்டு வைக்க வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும், குமரி மாவட்டத்தில் சில பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்படுவதாக பள்ளிக் கல்வித் துறையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர் தங்கள் குழந்தைகளை சிபிஎஸ்இ பாட திட்டம் மற்றும் மெட்ரிக் தனியார் பள்ளிகளில் சேர்க்கை செய்யும் முன், அப்பள்ளி அரசின் அங்கீகாரம் பெற்று செயல்படுகிறா? என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று தெரிவித்துள்ளது. அந்த வகையில் அங்கீகாரமற்ற பள்ளிகளின் விபரத்தை வெளியிட வேண்டிய முதன்மை கல்வி அலுவலகமும் இத்தகவல்களை வெளிப்படையாக இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Tags : schools ,CBSE ,district ,Kumari ,
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...