×

கல்வித்துறை செயலர், டிஜிபியிடம் விளக்கம் கேட்டு மீண்டும் நோட்டீஸ்

புதுச்சேரி, ஏப். 30: புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரிக்கு உதவியாளர் பணிக்கு, கடந்த 2005 மற்றும் 2008ம் ஆண்டு விண்ணப்பம் வரவேற்கப்பட்டது. பொதுப்பிரிவு - 19, தாழ்த்தப்பட்டோர் - 17, மாற்றுத்திறனாளிகள் - 2 என்ற இடஒதுக்கீடு அடிப்படையில் இந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டன. புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பலர், இப்பணிக்கு விண்ணப்பித்தனர். ஆனால் யாரும் தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு மே 7ம் தேதி திடீரென 27 பேர் தினக்கூலி ஊழியராக பணியில் அமர்த்தப்பட்டனர். இவர்களில் தாழ்த்தப்பட்டோர் ஒருவர் கூட இடம் பெறவில்லை. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வேல்முருகன், வேலுசாமி ஆகியோர் வழக்கு தொடுத்தனர்.

 இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி, 25 தினக்கூலி ஊழியர்கள் கொல்லைப்புறமாக நியமிக்கப்பட்டுள்ளனர். தினக்கூலி ஊழியர்களின் குடும்பத்தின் சூழ்நிலை கருதி பணி நீக்கம் செய்ய வேண்டாம். அதேவேளையில், பாதிக்கப்பட்டவர்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு இதுவரை அமல்படுத்தப்படவில்லை.  இதுதொடர்பாக மேல்முறையீட்டு வழக்கில், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பணம் இல்லை. நிர்ப்பந்தம் காரணமாக கொல்லைப்புறமாக வேலைக்கு நியமனம் செய்து உள்ளேன் என்று கல்வித்துறை செயலர் அபிடவிட் தாக்கல் செய்தார். இந்த வழக்கில், மனு தாக்கல் செய்த இருவருக்கும் வயது வரம்பை தளர்த்தி கட்டாயமாக வேலை வழங்க வேண்டும். கொல்லைப்புறமாக நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் நியமனம் தடை செய்யப்படுகிறது என்று இரு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

 இதற்கிடையே புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரியில் தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீடு அமல்படுத்தாததை கண்டித்து தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணைய இயக்குனருக்கு புதுச்சேரி வேல்முருகன், வேலுசாமி ஆகியோர் சார்பில் புகார் மனு அனுப்பப்பட்டது.
 அதில், தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, கல்லூரி முதல்வர் மற்றும் இது சம்பந்தமாக கோப்புகளை பார்த்த அலுவலர்கள் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என
கூறப்பட்டிருந்தது. புகாரை பெற்ற தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், இதுதொடர்பான 20 நாட்களுக்கு புதுச்சேரி கல்வித்துறை செயலர் மற்றும் போலீஸ் டிஜிபி ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும், இல்லாவிட்டால் இருவரும் நேரில் ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என எச்சரித்து கடந்த செப்டம்பர் 24ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. 6 மாதமாகியும் இதுவரை கல்வித்துறை செயலர் பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அரசு கல்வி செயலர் மற்றும் டிஜிபிக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் உடனடியாக வேல்முருகன், வேலுசாமி ஆகியோர் மனு மீது காலதாமதம் செய்யாமல் நடவடிக்கை எடுத்து தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு பதில் அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் இருவரும் ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என எச்சரித்துள்ளது.

Tags : Education Secretary ,
× RELATED பெரியார் பல்கலை பதிவாளரை சஸ்பெண்ட்...