×

பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு நகை திருடிய பெண் கைது

மரக்காணம், ஏப். 30: மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான காளியாங்குப்பம், வட அகரம், நடுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 மாதத்திற்கும் மேலாக வீட்டை பூட்டி விட்டு சாவியை வீட்டின் எதிரில் வைத்துவிட்டுச்செல்பவர்களின் வீடுகளை குறிவைத்து அந்த வீட்டில் இருந்த நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இவ்வாறு நகை, பணத்தை பறிகொடுத்தவர்கள் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் போலீசார் திருடுபோன பகுதியில் உள்ள ஒரு சில நபர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரனை நடத்தினர். ஆனால் அப்போது உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர். ஆனால் இதுபோல் நகைகள் திருடுபோகும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்ததால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்குமுன் மரக்காணம் அருகே காளியாங்குப்பம் கிராமத்தில் சந்தேகப்படும்படியாக அடையாளம் தெரியாத ஒரு பெண் அப்பகுதியில் உள்ள தெருக்களில் சுற்றி வந்துள்ளார்.

இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் அந்த பெண்ணை பிடித்து மரக்காணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அவர் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் மேற்கு பகுதியைச் சேர்ந்த பாலு மனைவி கல்பனா (38) என்பதும், இவர் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 6மாதத்திற்கும் மேலாக பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு அந்த வீடுகளை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. மேலும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை புதுவை பகுதியில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்து அவர் திருடி விற்பனை செய்த நகைகளை மீட்டு சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : houses ,
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்