×

திருச்செந்தூர்-வீரபாண்டியன்பட்டினம் சாலையில் தடுப்புச்சுவர் இல்லாத பாலத்தால் விபத்து அபாயம்

திருச்செந்தூர், ஏப். 30:  திருச்செந்தூர்-வீரபாண்டியன்பட்டினம் சாலையில் தடுப்புச் சுவர் இல்லாத பாலத்தால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனால் அவதிப்படும் மக்கள் விரைவில் சீரமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
   திருச்செந்தூர்- வீரபாண்டியன்பட்டினம் சாலையில் ஆங்கிலேயர் காலத்தில் 1943ம் ஆண்டு  கட்டப்பட்ட குறுகிய பாலம் உள்ளது. 10 அடி அகலமும், 40 அடி நீளமும் கொண்ட இப்பாலத்தின் வழியாக திருமண மண்டபம் மற்றும் குறிஞ்சிநகர், வாவுநகர், கேடிசி நகர், பிரசாத் நகர், முத்துநகர், சிவந்திநகர், வீரபாண்டியன்பட்டணம், சண்முகபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மினி பஸ் மற்றும் அடைக்கலாபுரம் வழியாக தூத்துக்குடிக்கு செல்லும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. மேலும் இங்குள்ள  பொதுமக்கள் திருச்செந்தூர் மற்றும் வீரபாண்டியன்பட்டினம் சென்று வருவதற்கு இப்பாலத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாலம் குறுகியதாக இருப்பதால் ஒரு பஸ் மட்டுமே சென்று வர முடியும். எதிரே மற்றொரு வாகனம் வந்தால் முதலில் வரும் வாகனம் சென்ற பிறகே மற்ற வாகனம் வர முடியும். இந்நிலையில் இப் பாலத்தின் தடுப்புச் சுவர்கள் பழுதடைந்து இடிந்து விழுந்தன. இதனால் இருபக்கமும் தடுப்புச் சுவர்களின்றி பாலம் தரைமட்ட பாலம் போன்று காணப்படுகிறது. இரவு நேரங்களில் அந்த வழியாக செல்பவர்கள் ஒருவித அச்சத்துடனேயே செல்கின்றனர்.  டூவிலர்களை ஒதுக்குவதற்கு கூட இடமின்றி பாலத்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இதனால் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் இப்பாலம் வழியாகத்தான் மதுரை, விருதுநகர், அருப்புகோட்டை, சிவகாசி, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருச்செந்தூர் கோயிலுக்கு அலகுகுத்தி, காவடி, பால்குடம் எடுத்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் என திரளானோர் செல்வதால் மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நடக்கும் முன்பாக பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க முன்வருமா? என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Tags : road accident ,road ,Tiruchendur-Veerapandinpattinam ,
× RELATED சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு