×

வேதாரண்யத்தில் உப்புசத்தியாகிரக நினைவு தினத்தையொட்டி உண்ணாவிரதம்

வேதாரண்யம், ஏப்.30:  வேதாரண்யத்தில் 89ம் ஆண்டு உப்புசத்தியாகிரக நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் தொண்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தில்  1930ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி ஆங்கில ஆட்சிக்கு எதிராக உப்பு  சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.  உப்பு சத்தியாகிரக போராட்டத்திற்கு  ராஜாஜி சர்தார் வேதரத்தினம் உள்ளிட்டோர் தலைமையில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள்  உப்பு அள்ளி கைதானார்கள். அவர்கள் உப்பு அள்ளிய இடத்தில் உப்பு சத்தியாகிரக  நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 30ம் தேதி உப்பு அள்ளும்  நிகழ்ச்சியும், உப்பு சத்தியா கிரக நினைவு ஸ்தூபிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.
 
89ம் ஆண்டு நினைவு பாதயாத்திரை கடந்த 28ம் தேதி திருச்சி ராஜன்பங்களா நினைவு  ஸ்தூபியில் இருந்து புறப்பட்டு ஸ்ரீரங்கம், கல்லணை, திருக்காட்டுபள்ளி,  திருவையாறு, தஞ்சாவூர்,  அய்யம்பேட்டை, பாபநாசம், கும்பகோணம், நீடாமங்கலம்,  மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, தகட்டூர், ஆயக்காரன்புலம் வழியாக  வேதாரண்யத்திற்கு நேற்றுமுன்தினம் வந்து சேர்ந்தனர். ஊர்வலமாக வந்த  தியாகிகள் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் நேற்று  உண்ணாநோன்பு மேற்கொண்டனர்.     சுதந்திர வரலாற்றையும் அதற்காக சிந்திய ரத்தத்தையும், தியாகத்தையும் இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும்  வகையில் உண்ணாவிரதத்தில் தேசபக்தி பாடல்கள் பாடி சுதந்திர வரலாற்றுகளை எடுத்துக்கூறினர்.  

உண்ணாவிரதத்திற்குஉப்பு சத்தியாகிரக தண்டியாத்திரை கமிட்டி சக்திசெல்வகணபதி தலைமை வகித்தார். உண்ணாவிரத்தை சுதந்திர போராட்ட தியாகி சர்தார் வேதரத்தினத்தின் பேரன் வேதரத்தினம் துவக்கி வைத்தார். உண்ணாவிரதத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.வி.ராஜேந்திரன் முடித்து வைத்தார். உண்ணா விரதம் மேற்கொண்ட காங்கிரஸ் தொண்டர்கள் பூரண  மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினர்.  இன்று அதிகாலை உப்பு  சத்தியாகிரக நினைவு ஸ்தூபியிலிருந்து காங்கிரஸ் தொண்டர்கள் ஊர்வலமாக சென்று  அகஸ்தியன்பள்ளியில் உப்பு அள்ளும் நிகழ்ச்சி நடத்துகின்றனர்.

Tags : occasion ,celebration ,Vedaranyam ,
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்