×

மானாவாரியில் கேழ்வரகு சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம் விவசாயிகளுக்கு ஆலோசனை

பெரம்பலூர்.ஏப்.30: இறவை மற்றும் மானாவாரியில் கேழ்வரகு சாகுபடி செய்வது குறித்து வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் உணவு தானியத்தில் 25 சதம் கேழ்வரகு விளைகிறது.அரிசி மற்றும் கோதுமையை விட ஊட்டச்சத்து நிறைந்தது.ராகியில் அமைந்துள்ள புரதமானது பிராலமின் மற்றும் குளுட்டனின் மற்றும் உடலுக்குத் தேவையான அனைத்து அமினோ அமிலங்களும் ராகியில் காணப்படுகிறது.

கேழ்வரகு மானாவாரி பயிராக தமிழ்நாட்டில் ஜூன்,ஜூலையிலும் குளிர்காலத்தில் செப்படம்பர்,அக்டோபர் மாதத்திலும் கோடைகால பாசன பயிராக ஜனவரி,பிப்ரவரி மற்றும் ஏப்ரல் ,மே மாதத்தில் நடவு செய்யப் படுகிறது. கோ.9,கோ 13,ஆர்.ஏ 14 போன்ற ரகங்கள் கேழ்வரகு சாகுபடி செய்யப்படுகிறது.பயிரிடுவதற்கு முன்பே நிலத்தை கோடை உழவு செய்து ஈரபதத்தை சேமிக்க வேண்டும்.

ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இறக்கை கலப்பை கொண்டு ஒருமுறை ஆழமாக உழுது இரண்டுமுறை நாட்டு மரக்கலப்பை கொண்டு உழவு செய்து மென்மையான விதைப் பாத்திகள் விதைப்பிற்கு முன் தயார் செய்யவும்,நல்ல மகசூல் பெறுவதற்கு ஒரு எக்டருக்கு 4.5 லட்சம் பயிர் எண்ணிக்கை அவசியம் வரிசைக்கு வரிசை 22.5-30 செ.மீ இடைவெளி கொடுக்க வேண்டும். கேழ்வரகு ஒரு ஹெக்டருக்கு 15-20 கிலோ விதைகள் தேவைப்படும் .விதையிடும் கருவியை பயன்படுத்தி செடிக்கு செடி ஊட்டச்சத்துகள் பயன்பாடு செடிக்கு திறம்பட கிடைக்கிறது.

மானாவாரியில் அதிக மகசூல் பெற விதைக்குப்பின் தேவையான அளவு ஈரம் இல்லாமல் இருந்தால் முளைப்புதிறன் பாதிக்கும்.இப்படிப்பட்ட சூழ்நிலையில் விதை கடினமாக்குதல் முறையை பின்பற்றினால் முனைப்புதிறன் அதிகரிப்பதோடு மட்டு மல்லாமல் நாற்றுகளுக்கு வீரியம் உண்டாவதுடன் வறட்சியைத் தாங்கும் திறன் ஏற்படுகிறது. மானாவாரி சாகுபடிக்கு விதைகளை 6 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும் ஒரு கிலோ விதைக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.விதைகள் முளைக்க துவங்கிவிடும் ஈரத்துணியிலிருந்து விதைகளை அகற்றி பின்னர் வறண்டதுணியில் 2 நாட்கள் நிழலில் உலரவைக்க வேண்டும்.

இவ்வாறு கடினமாக்கப்பட்ட விதைகளை விதைப்பிற்கு பயன்படுத்த வேண்டும்.மானாவாரி கேழ்வரகு பயிருக்கு தலைச்சத்து,மணிச்சத்து,சாம்பல் சத்து முறையே 40க்கு20க்கு20 கிலோ ஹெக்டர் பரிந்துரைக்கப்பட்ட மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து முழுவதும் விதைத்தவுடனும் தலைச்சத்துவை 2 அல்லது 3 ஆக பிரித்து ஈரப்பதத்தை பொறுத்து அளிக்க வேண்டும்.

ஒருகிலோ விதைக்கு 25கிராம் அசோஸ்பைரில்லம் ப்ரேசில்லன்ஸ் மற்றும் அஸ்பர்ஜில்லஸ் அவமோரியை கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். பிறகு களை கட்டுப்பாடு,நீர் மேலாண்மை,பயிர் சுழற்சி,கலப்பு பயிர் போன்றவற்றை சரி செய்து தானிய கதிர் 50 சத கதிர்கள் பழுப்பு நிறமடைந்த பிறகு அதை அறுவடை செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

Tags :
× RELATED எசனை காட்டு மாரியம்மன் கோயில் தேரோட்டம்