அதிராம்பட்டினம், ஏப். 30: ராமநாதபுரத்தில் இருந்து அதிராம்பட்டினத்துக்கு மேய்ச்சலுக்காக அதிகளவில் செம்மறி ஆடுகளை தொழிலாளர்கள் ஓட்டி வந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகளவில் செம்மறி ஆடுகள் வளர்க்கப்படுகிறது. கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் செம்மறி ஆடுகளுக்கு அந்த வெப்பநிலை ஒத்து கொள்ளாது. இதனால் இடம் விட்டு இடம் மாறி செம்மறி ஆடுகளை வேனில் ஏற்றி கொண்டு தஞ்சை மாவட்ட பகுதியான அதிராம்பட்டினம் பகுதிக்கு தொழிலாளர்கள் வந்துள்ளனர்.
இதுகுறித்து செம்மறி ஆடு வளர்க்கும் தொழிலாளியான வெள்ளையப்பன் கூறுகையில், செம்மறி ஆடுகள் வளர்ப்பது மிக கடினம். வெயிலின் தாக்கம் அதிகரித்தால் ஆடுகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். ராமநாதபுரத்தில் வெயில் அதிகமாக உள்ளதால் தஞ்சை மாவட்டத்துக்கு செம்மறி ஆடுகளை ஓட்டி வந்துள்ளோம். தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தில் உள்ள இயற்கை நிறைந்த குளிர்ச்சியான பகுதியில் தங்கி ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு இரவு நேரத்தில் கூடாரத்தில் அடைத்து விடுவோம்.
அலையாத்திகாடு பகுதியில் தங்கி மேய்ச்சலுக்கு விடும்போது இரவு நேரத்தில் ஆடுகளை பிடிக்க நரிகள் அதிகளவில் வருகிறது.
எனவே இரவு நேரத்தில் தீப்பந்தம் ஏற்றி காவல் காப்போம். பின்னர் அங்கிருந்து மேய்ச்சலை முடித்த பிறகு மற்ற பகுதியான புல் அதிகமாக உள்ள வயல் பகுதிக்கு ஆடுகளை ஓட்டி செல்வோம். மழைக்காலம் துவங்கியவுடன் எங்கள் பகுதியான ராமநாதபுரம் பகுதிக்கு சென்று விடுவோம் என்றார்.