×

தஞ்சை மாநகரில் அம்ரூத் திட்டத்தின் கீழ் 4 இடங்களில் ரூ.3 கோடி மதிப்பில் பூங்காக்கள் அமைக்கும் பணி தீவிரம் விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது

தஞ்சை, ஏப். 30: தஞ்சை மாநகரில் ரூ.3 கோடி மதிப்பில் 4 இடங்களில் அம்ரூத் திட்டத்தின் கீழ் பூங்காக்கள் அமைக்கும் பணி நடக்கிறது. இது விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. தஞ்சை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் ஸ்மார்ட் சிட்டியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தஞ்சை மாநகரில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் முதல்கட்டமாக தஞ்சை வெண்ணாறு குடிநீரேற்று நிலையம் மேம்படுத்துதல், தஞ்சை சிவகங்கை பூங்கா மேம்படுத்துதல், அகழியை தூர்வாரி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகுசவாரி விடுதல், தஞ்சை ராஜவீதிகளை ஸ்மார்ட் சாலையாக மாற்றுதல், தஞ்சை பெரிய கோயில் நுழைவு வாயிலை அழகுப்படுத்துதல் என்று பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதைதொடர்ந்து தஞ்சை மாநகரில் மத்திய அரசின் திட்டத்தின்கீழ் பூங்காக்கள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி தஞ்சை மாநகரில் அம்ரூத் திட்டத்தின்கீழ் ரூ.308.60 லட்சத்தில் 4 இடங்களில் பல்வேறு வசதிகளுடன் கூடிய பூங்காங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் நிறைய  சுற்றுலா தலம் உள்ளது. அதில் தஞ்சை  மாநகர எல்லையில் சுற்றுலா பயணிகளின் கவனத்தை அதிகம் ஈர்க்கும் வகையில் உலக புகழ்பெற்ற பெரிய கோயில், சிவகங்கை பூங்கா, அரண்மனை, மணிமண்டபம் என்று சுற்றி பார்க்க பல இடங்கள் உள்ளது.

தஞ்சை ஸ்மார்ட் சிட்டியாக அறிவித்த பின்னர் தஞ்சை வரும் பயணிகள் மற்றும் மக்களுக்காக தஞ்சை மாநகராட்சி பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் தஞ்சை மக்கள் பயன்பெறும் வகையில் பல திட்டங்களில் 2017-2018ம் நிதி ஆண்டில் அம்ரூத் திட்டத்தின்கீழ் 4 பூங்காக்கள் அமைக்க ரூ.308.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த பூங்காக்கள் தஞ்சை பகுதியை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் அமைக்க முடிவு செய்யப்பட்டு தஞ்சை சத்யகிருஷ்ணா நகர், ராயல் சிட்டி, அலுமேலு நகர், முல்லை நகர் ஆகிய இடங்களில் பூங்காக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பூங்காக்கள் மிகவும் மேம்படுத்தப்பட்ட வகையில் அனைத்து வசதிகளையும் கொண்டதாக அமையவுள்ளது. மக்களின் நடைபயிற்சி, குழந்தைகள் விளையாட சறுக்கு மரம், குடிநீர், தியானம் செய்ய இடம், கழிவறை வசதி ஆகியவை கொண்டு அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.  இதுகுறித்து தஞ்சை மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் கூறியதாவது: ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டவுடன் தஞ்சை மாநகராட்சி முழுவதும் அழகுப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் அம்ரூத் திட்டத்தின்கீழ் 4 இடங்களில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் சிறுவர்கள் விளையாட்டு சாதனங்கள் மற்றும் பெரியவர்கள் தியானம் செய்ய வசதி என்று அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வண்ணம் வடிமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த 4 இடங்களில் 85 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். குறிப்பாக மாலை நேரத்தில் பெண்கள் நடைபயிற்சி செய்வதற்கும், தியானம்,   உடற்பயிற்சி செய்ய இடம் என்று தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. புல்தரை வசதி, குடிநீர் என்று அனைத்தும் இந்த பூங்காவில் அமையும். சத்யகிருஷ்ணா நகர் வார்டு 1ல் அமைக்கப்பட்டு வரும் பூங்கா ரூ.84.40 லட்சம் மதிப்பிலும், ராயல் சிட்டி நகர் வார்டு 13ல் ரூ.76.40 லட்சம் மதிப்பிலும், அலமேலு நகர் வார்டு 44ல் ரூ.49.40 லட்சம் மதிப்பிலும், முல்லைநகர்  வார்டு 51ல் ரூ.98,40 லட்சம் மதிப்பிலும்  என்று 4 இடங்களில் பூங்கா அமையும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.

Tags : parks ,places ,city ,Tanjore ,
× RELATED கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னையில் 188 இடங்களில் தண்ணீர் பந்தல்..!!