×

திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரையிலான உப்பு சத்தியாக்கிரக நினைவு யாத்திரை குழுவுக்கு மன்னார்குடியில் வரவேற்பு

மன்னார்குடி, ஏப். 30: பிரிட்டிஷ் அரசு இந்தியர்கள் மீது விதித்த உப்பு உற்பத்தி வரியை எதிர்த்து, காந்தியடிகள்  தண்டியில் நடத்திய உப்புச் சத்தியாகிரகம் போன்று தமிழ் நாட்டின் வேதாரண்யம் கடலில் உப்பு அள்ளும் போராட்டமாக 1930ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதியன்று  வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம் நடைபெற்றது. ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஏராளமான  முக்கிய  தலைவர்கள், தியாகிகள் கலந்து கொண்டனர். சர்தார் வேதரத்தினம் பிள்ளை போராட்டக் குழுவினர்களுக்கு அனைத்து வகைகளிலும் உதவினார்.  இப்போராட்டத்தின் விளைவாக சர்தார் வேதரத்தினம் பிள்ளை, ராஜாஜி உட்பட பலர் கைதாகி ஆறுமாத சிறைத் தண்டனை அனுபவித்தனர். ராஜாஜி உப்பு அள்ளிய வேதாரண்யத்தில்  நினைவுத் தூண் அமைக்கப் பட்டது.

இந்நிலையில் நாட்டின் சுகந்திரத்திற்காக அரும்  பாடுபட்ட தியாகிகளின் வரலாறுகளை இளைஞர்கள் மத்தியில் கொண்டு  சேர்க்கும் நோக்கத்தில்   உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவு கமிட்டி சார்பில் ஆண்டு தோறும் திருச்சியில் இருந்து வேதாரண்யம் வரை யாத்திரை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் 89ம் ஆண்டு நினைவு யாத்திரையின் துவக்க விழா  நேற்று காலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில்  நடைபெற்றது.

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவு கமிட்டி தலைவர்  சக்தி செல்வ கணபதி தலைமையில் நடைபெறும் யாத்திரையை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மன்னை மதியழகன் துவக்கி வைத்தார். இந்த யாத்திரை யில் சுகந்திர போராட்ட தியாகி சாட்டியக்குடி சம்மந்தம் பிள்ளை (96) உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட தியாகிகள் பங்கேற்றுள்ளனர். திருச்சியில் துவங்கிய யாத்திரை பல்வேறு ஊர்களில் பிரச்சாரம் செய்து விட்டு நேற்று மாலை மன்னார்குடிக்கு வந்தது.

யாத்திரை குழுவிற்கு மன்னார்குடி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் கனக வேல் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் நெடுவாய் குணசேகரன், வடுகநாதன், நகர துணைத் தலைவர்கள் சுகுமார், பாலபாரதி, நகர பொதுச் செயலாளர்கள் ஆனந்த கிருஷ்ணன், ராஜ்மோகன், கோட்டூர் வட்டார முன்னாள் தலைவர் ஜெயசங்கர் உள்ளிட்ட ஏராளமான காங்கிரசார் பங்கேற்றனர். பின்னர்  மன்னார்குடி தேரடி பகுதியில் அமைந்துள்ள காந்தியடிகள் சிலைக்கு  யாத்திரை குழுவினர் மாலையணி வித்து மரியாதையை செய்தனர்.

இதுகுறித்து, உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவு கமிட்டி தலைவர்  சக்தி செல்வ கணபதி கூறுகையில், உலக அமைதி வேண்டியும், பூரண மது விலக்கு கோரியும், நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளின் வரலாறுகளை இளைஞர்கள் மத்தியில் கொண்டு  சேர்க்கும் நோக்கத்தில் திருச்சியில் துவக்கிய உப்பு சத்தியாகிரக நினைவு யாத்திரை வேதாரண்யம் நோக்கி செல்கிறது. மேற்கொண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (திங்கள்கிழமை ) காலை முதல் மாலை வரை வேதாரண்யம் சர்தார் வேதாரத்தினம் சிலையருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது. போராட்டத்தை உப்புத்தொழிலாளர் சங்க தலைவர், முன்னாள் எம்பி  பி.வி.ராஜேந்திரன் துவக்கி வைக்கிறார். சர்தார் வேதாரத்தினம் பிள்ளையின் பேரன் கையிலை மணி வேதரத்தினம் முடித்து வைக்கிறார். நாளை(30ம் தேதி) உப்பு அள்ளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்றார்.

Tags : Salu Satyagraha Memorial Pilgrims ,Trichy ,Vedaranyam ,Mannargudi ,
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்