×

காவிரி ஆற்றில் மணல் அள்ள அனுமதி வழங்க கோரி கஞ்சி தொட்டி திறந்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகம் அருகே பரபரப்பு

திருச்சி, ஏப். 30: காவிரி ஆற்றில் மணல் அள்ள அனுமதிக்க கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே கஞ்சி தொட்டி திறந்து மாட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மணல் அள்ளுவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து அரசு கட்டுப்பாட்டில் உள்ள குவாரியில் ஆன்லைன் மூலம் மட்டுமே மணல் அள்ளப்படுகிறது. இதில் மாட்டு வண்டியில் மணல் அள்ளி விற்பவர்களுக்கு எவ்வித கட்டுபாடும் விதிக்கப்படவில்லை. அவர்களின் வாழ்வாதாரத்திற்கு மணல் அள்ள உத்தரவிடப்பட்டது. இதில் திருச்சி மாவட்டத்தில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மாதவபெருமாள் கோவில் பகுதியில் உள்ள குவாரியில் மணல் அள்ளி விற்று வந்தனர். இதில் கூடுதலாக கீழமூல்லைகுடி, அரியூர் பகுதியில் மணல் அள்ள அனுமதி அளிக்க கோரி கடந்த பிப்ரவரி 22ம் தேதி திருச்சியில் உள்ள பொதுப்பணித்துறை கோட்ட அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதில் மார்ச் 4ம் தேதி முதல் மணல் அள்ளலாம் என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். ஆனாலும் அளித்த வாக்குறுதிப்படி மணல் அள்ள அனுமதிக்காமல் அரசு அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்தனர்.

பேச்சுவார்த்தையின் போது அளித்த வாக்குறுதிப்படி 2 இடங்களில் மணல் அள்ள அனுமதி அளிக்க வேண்டும் என கோரி சுப்ரமணியபுரத்தில் உள்ள திருச்சி கோட்ட பொதுப்பணித்துறை அலுவலகத்தை மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் கடந்த 8ம் தேதி குடும்பத்துடன் முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.  தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடிந்த பின் 19 மற்றும் 20ம் தேதிகளில் கலெக்டரை சந்தித்து பிரச்னை குறித்து பேசி சுமூக தீர்வு காணப்படும் என கூறினர். இதனை ஏற்ற தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனாலும் அளித்த வாக்குறுதிபடி மணல் அள்ள எவ்வித முன்னேற்பாடும் செய்யாததை கண்டித்து 29ம் தேதி கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தி கஞ்சி தொட்டி திறக்கப்படும் என மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்தனர்.

இதையடுத்து அறிவிப்புப்படி நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட தலைவர் ராஜா, மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ராமர் தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டனர். அதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு சென்ற மேற்கு தாசில்தார் ராஜவேலு, திருவெறும்பூர் தாசில்தார் அண்ணாதுரை ஆகியோர் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கஞ்சி தொட்டி திறக்க வேண்டாம், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்படுத்தி தரப்படும் என சமாதானம் பேசி முக்கிய நிர்வாகிகளை கலெக்டரிடம் பேச அழைத்து சென்றனர். ஆனாலும் திட்டமிட்டப்படி தொழிலாளர்கள் தயாராக சமைத்து வைத்திருந்த கஞ்சி தொட்டியை திறந்து தொழிலாளர்களுக்கு வழங்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அங்கு சென்ற போலீசார் கஞ்சி தொட்டி திறக்க கூடாது என உத்தரவிட்டனர்.

இதற்கிடையில் கலெக்டர் சிவராசு தலைமையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அரசு சார்ந்த பணிகளுக்கு எவ்வித உத்தரவும் பிறப்பிக்க முடியாது. எனவே மேமாதம் 23ம் தேதிக்கு பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்படும். அதற்குள் மணல் குவாரி திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு மேமாதம் 30ம் தேதிக்குள் மணல் அள்ள அனுமதி பெற்று தரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்ற தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று திரும்பி சென்றனர்.

Tags : river ,collector ,Cauvery ,office ,cow workers ,
× RELATED பள்ளிப்பட்டு அருகே லவா ஆற்றில் ராட்சத...