×

துறையூர், தொட்டியத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல் போக்குவரத்து கடும் பாதிப்பு

துறையூர், ஏப்.30: துறையூர் நகராட்சியில் முறையாக குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் துறையூர்-ஆத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்குள்ள அனைவரும் முறையாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி, வீட்டு வரி உட்பட அனைத்து வரிகளையும் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்காமல் இருந்து வந்தது. இதுகுறித்து  நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பலமுறை நேரில் சென்று மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் குடிநீர் பெற வேண்டி பொதுமக்கள் பாலக்கரையில் இருந்து சுமார் 3 கி.மீ தூரம் சென்று குடிநீர் எடுத்து வர வேண்டிய அவல நிலைக்கு ஆளாகினர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை பொதுமக்கள் காலி குடங்களுடன் திரண்டு துறையூர்-ஆத்தூர் சாலையில் பாலக்கரையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். முறையாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும்  என்று உறுதியளித்ததின் பேரில் பெண்கள் கலைந்து சென்றனர்.

இதனால் துறையூரிலிருந்து ஆத்தூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபோல் துறையூர் அடுத்த கோட்டாத்தூரில் கடந்த 10 நாட்களாக முறையாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேரம் சாலை மறியல் நீடித்தது. தகவல் அறிந்த துறையூர் போலீசார் பேச்சுவாhத்தை நடத்தி முறையாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கூறி அளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது.

தொட்டியம்: தொட்டியம் தாலுகா நத்தம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக வீடுகளுக்கு  குறைந்த மின் அழுத்த மின்சாரம் வருவதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதனால் வீடுகளில் போதிய வெளிச்சம் இல்லாமலும் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை இயக்குவதில் சிரமம் ஏற்படுவதாகவும் வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை சரி செய்து சீரான மின் விநியோகம் வழங்கியும் தட்டுப்பாடற்ற குடிநீர் வழங்கிட வேண்டும் என கேட்டு பொதுமக்கள் நேற்று சாலையில் மரத்துண்டுகளை போட்டு மறியலில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரமாகியும் பேச்சுவார்த்தைக்கு எந்த அலுவலர்களும் வராததால் அதி்ருப்தி அடைந்த பொதுமக்கள் மின் விநியோகத்தை சீராக தரும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

நீண்ட நேரத்திற்கு பின் சம்பவ இடத்திற்கு வந்த தொட்டியம் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர், மின்வாரியத்தினர் பொதுமக்களின் கோரிக்கை குறித்து பத்து தினங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அங்கு 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : pond ,
× RELATED கூடலூர் நகராட்சி வருவாயை பெருக்க...