×

அதிமுக எம்எல்ஏ உதவியாளரை எஸ்ஐ தாக்கியதாக பரபரப்பு புகார்

ஆத்தூர், ஏப்.30: சேலம் மாவட்டம், ஆத்தூர் எம்எல்ஏவாக அதிமுகவை சேர்ந்த சின்னதம்பி உள்ளார். இவரது உதவியாளராக ராமநாயக்கன்பாளையம் காமராஜ் நகரை சேர்ந்த செல்வகுமார்(34) பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று, செல்வகுமார் ஆத்தூர் டிஎஸ்பி ராஜூவிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: சின்னதம்பி வழங்கிய கடிதம் ஒன்றை, ஆத்தூர் ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசனிடம் வழங்குவதற்காக கடந்த 28ம் தேதி வந்தேன். அப்போது பணியில் இருந்த எஸ்ஐ கெங்காதரன் கடிதத்தை வாங்கி படித்துவிட்டு, ஏன் காலையில் வர மாட்டீயா, குடிச்சிட்டு வந்திருக்க என தகாத வார்த்தைகளால் திட்டி, சரமாரியாக அடித்து விட்டு ரிமாண்ட் செய்து விடுவேன் என மிரட்டினார். இது குறித்து காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து, எஸ்.ஐ. கெங்காதரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட டிஎஸ்பி ராஜூ விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இது குறித்து செல்வகுமார் கூறுகையில், ‘தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தீண்டாமை இல்லாத கிராமம் தேர்வு குறித்து, எம்எல்ஏவின் பரிந்துரை கடிதத்தை கொடுப்பதற்காக, போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றேன். அப்போது பணியிலிருந்த எஸ்.ஐ கெங்காதரன், காரணமின்றி என்னை அடித்து, தகாத வார்த்தைகளால் திட்டியது காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்துள்ளேன். எம்எல்ஏவின் உதவியாளரான எனக்கே இப்படி நடந்தால், சாதாரண மக்களின் நிலை எப்படி இருக்கும் என நினைத்து பார்க்கவே முடியவில்லை,’ என்றார்.

Tags : AIADMK ,AI ,
× RELATED வாட்ஸ்அப், இன்ஸ்டா, பேஸ்புக்கில்...