×

கூலி உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி விசைத்தறி தொழிலாளர் வேலைநிறுத்தம் தொடரும்

குமாரபாளையம், ஏப்.30:  சேலம் தொழிலாளர் நலஉதவி ஆணையர் முன்னிலையில் நடந்த விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. குமாரபாளையம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு, கடந்த 22 மாதங்களாக கூலி உயர்வு வழங்கப்படவில்லை. பல்வேறு போராட்டங்களை நடத்தியும், தொழிலாளர்களின் கோரிக்கையை அரசும், அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை சேலம் தொழிலாளர் நலஉதவி ஆணையர் அலுவலத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. உதவி ஆணையர் கோடீஸ்வரி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் அடப்புதறி உரிமையாளர்களும், சிஐடியூ தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தறி உரிமையாளர்கள் தரப்பில் 10 சதவீதம் கூலி உயர்வு வழங்குவதாக தெரிவித்தனர்.

 ஆனால், இதை தொழிற்சங்கத்தினர் ஏற்கவில்லை. 20 சதவீதத்திற்கு மேல் கூலி உயர்வு வழங்க வேண்டுமென தெரிவித்தனர். இதை அடப்பு தறி உரிமையாளர்கள் ஏற்கவில்லை. விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்களுக்கு வழங்குவதாக தெரிவித்த 10 சதவீத கூலி உயர்வு தொகையை அப்படியே நெசவாளர்களுக்கு தருவதாக தெரிவித்த தறி உரிமையாளர்கள், மேற்கொண்டு ஜவுளி உற்பத்தியாளர்கள், தங்களுக்கு கூலியை உயர்த்தி கொடுத்தால் தான் தர முடியும் என தெரிவித்தனர். இதை தொழிற்சங்கத்தினர் ஏற்கவில்லை. இதனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து, அடுத்த சுற்று பேச்சுவார்த்தை மே மாதம் 20ம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, ஜவுளி உற்பத்தியாளர்கள், அடப்புதறி உரிமையாளர்கள், தொழிற்சங்கம் ஆகியோரை கொண்ட முத்தரவு பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னை குறித்து பேசி முடிவெடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென உதவி ஆணையர் கேட்டுக்கொண்டார். தொழிலாளர் பிரச்னையில் தீர்வு ஏற்படாததால் வேலைநிறுத்த போராட்டம் தொடருமென சிஐடியூ தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அசோகன் தெரிவித்தார்.

Tags : wage hike negotiation ,Lt. Workers Strike ,
× RELATED கிணற்றில் தவறி விழுந்த 10 வயது சிறுவன் மீட்பு