×

பரமத்திவேலூர் அருகே வீரகாரன் மாலா சுவாமி கோயில் பூ தாண்டுதல் விழா

பரமத்திவேலூர், ஏப்.30:  பரமத்திவேலூரை அடுத்த எஸ்.வாழவந்தி ஊராட்சிக்கு உட்பட்ட மேலப்பட்டியில் பிரசித்தி பெற்ற வீரகாரன் மாலா சுவாமி கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் காளை பூ தாண்டும் விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, கடந்த 14ஆம் தேதி கம்பம் நட்டு காப்பு கட்டுதல் நடந்தது. தொடர்ந்து தினமும் இரு வேளைகளில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை நடந்தது. சனிக்கிழமை இரவு சுவாமி அழைப்பு மற்றும் ஊர்வலம், எண்ணைக்காப்பு, சிறப்பு அலங்காரம், வாண வேடிக்கை நடந்தது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு, செங்கரும்பு பந்தல் அமைத்து திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டு வீரகாரன் மாலா சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை 11 மணிக்கு பச்சை மூங்கிலில் தோரணம் நடுதல், பிற்பகலில் கோயில் காளைகளை அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், அவற்றுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டது.

விழாவின் முக்கிய நிழ்வான பூ தாண்டுதல் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதனையொட்டி கோயில் காளைகள் அனைத்தும் ஒரு திறந்தவெளி மைதானத்தில் நிறுத்தப்பட்டது. சிறிது தூரத்தில் பூக்களால் அமைக்கப்பட்டிருந்த எல்லைக்கோட்டை மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த காளைகள் 3 முறை தாண்டும் நிகழ்வு நடந்தது.  இதில் 3வது முறை எந்த காளை பூக்களால் அமைக்கப்பட்ட எல்லைக்கோட்டை தாண்டியதோ அந்த காளைக்கு பரிசு வழங்கி, அந்த காளையே கோயில் காளையாக அறிவிக்கப்படும். அதன்படி எஸ்.வாழவந்தி மேலப்பட்டி கோயில் மாடு முதலாவதாக வந்து கோயில் காளையாக வெற்றி பெற்றது. அந்த காளைக்கு ஊர் பட்டக்காரர்கள் மரியாதை செய்தனர். விழாவை ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கண்டு ரசித்தனர். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் பட்டக்காரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags : Veerakaran Mala Swamy Temple ,Paramathivelur ,
× RELATED பெற்றோருக்கு தெரியாமல் இரவில் கார்...