×

கோடை மழை காரணமாக பசுமைக்கு திரும்பியது முதுமலை வனப்பகுதி

கூடலூர், ஏப். 28:   கோடை மழை காரணமாக முதுமலை வனப்பகுதி பசுமைக்கு திரும்பி வருகிறது. இதனால் பந்திப்பூர் புலிகள் காப்பகம் அருகே சாலையோரங்களில் வனவிலங்குகள் உலா வருகின்றன.  முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நிலவிய வறட்சியின் காரணமாக செடி, கொடி, மரங்கள் காய்ந்து போயிருந்தன.இதனால் முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட தெப்பக்காடு மற்றும் மசினகுடி வனச்சரகங்களில் காட்டு தீ ஏற்பட்டு 100 ஏக்கருக்கு மேல் வனப்பகுதி எரிந்து சாம்பலாகின. மேலும் வனப்பகுதியில்  பசுந்தீவனங்கள் குறைந்து, தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வந்தன. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது பெய்து வரும் கோடை மழை காரணமாக வனப்பகுதியில் பசுமை திரும்பி வருகின்றன.  மேலும் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகம் வனப்பகுதிகளிலும் பசுமை திரும்பியுள்ளதால், சாலை ஓரங்களில் மேயும் மான்கள், யானை, மயில் போன்றவற்றை காண முடிகிறது. மழை காரணமாக வனப்பகுதி பசுமைக்கு திரும்பி வருவதால், காட்டு தீ அபாயம் நீங்கியுள்ளது. இதனால் வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.


Tags : Mudumalai forest ,
× RELATED தண்ணீர் தேடி அலையும் யானைகள்: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை