×

மஞ்சூரில் சிறப்பு நடுவர் நீதிமன்றம் அமைக்க வேண்டும்

மஞ்சூர், ஏப். 28:   மஞ்சூரில் சிறப்பு நடுவர் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.   ஊட்டி தாலுகாவில் இருந்து பிரிக்கப்பட்டு மஞ்சூரை தலைமையிடமாக கொண்டு கடந்த 1998ம் ஆண்டு குந்தா தாலுகா உருவானது. இதை தொடர்ந்து பொதுமக்களின் தொடர் வலியுறுத்தலால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சார்நிலை கருவூல அலுவலகம் திறக்கப்பட்டு குந்தா தாலுகா அலுவலகத்தின் ஒரு பகுதியில் செயல்பட்டு வருகிறது. இது தவிர தாலுகா அந்தஸ்து பெற்ற மஞ்சூரில் நீதிமன்றம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட வேறெந்த முக்கிய அலுவலகங்களும் இல்லை. குறிப்பாக நீதிமன்றம் இல்லாததால், மஞ்சூர் மற்றும் அதை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வழக்கு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஊட்டி போன்ற பகுதிகளுக்கு சென்று வர வேண்டியுள்ளது.

  இதனால், போக்குவரத்து மற்றும் கூடுதல் செலவு, அலைச்சல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் மஞ்சூர் பகுதியில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சியினர், பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஊட்டியில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற தமிழக சட்டத்தறை அமைச்சர் சண்முகம் குந்தா தாலுகா மஞ்சூர் பகுதியில் சிறப்பு நடுவர் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.   இந்த அறிவிப்பு மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்திய நிலையில், இரண்டாண்டுகள் கடந்தும் மஞ்சூரில் சிறப்பு நடுவர் நீதிமன்றம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எதும் எடுக்கவில்லை. இதனால் குந்தா பகுதி பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து மஞ்சூர் பகுதியில் சிறப்பு நடுவர் நீதிமன்றம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : arbitration court ,Manjur ,
× RELATED பாலியல் வழக்கில் தண்டனையை...