×

புதர் மண்டிக்கிடக்கும் சுடுகாடு மாநகராட்சி பகுதியில் அவலம்

கோவை, ஏப்.28: கோவை மாநகராட்சியில் மயானம், சுடுகாடுகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்காமல் செலவு கணக்கு மட்டும் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. கோவை மாநகராட்சியில் ஆத்துப்பாலம், சொக்கம்புதூர், பாப்பநாயக்கன்பாளையம், நஞ்சுண்டாபுரம் பீளமேடு, உப்பிலிபாளையம் உட்பட 80 இடத்தில் மயானம், சுடுகாடு உள்ளது. இந்த மயானம், சுடுகாடுகளை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிப்பதில்லை. சடலத்தை அடக்கம் செய்ய வருபவர்கள், முட்புதர்களை வெட்டி அகற்றி குழி தோண்ட படாதபாடு படவேண்டியுள்ளது. மாநகராட்சி சுடுகாடு, மயானங்களை ஆண்டிற்கு இரு முறை சீரமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் பல ஆண்டாக எந்த மயானமும் சீரமைக்கப்படவில்லை. தினமும் 4 முதல் 6 சடலம் அடக்கம் செய்யப்படும் ஆத்துப்பாலம் மாநகராட்சி மயானத்தின் பெரும்பகுதியில் முட்புதர் காணப்படுகிறது. பாம்பு, தேள் உள்ள இந்த வளாகத்தில் புதர் மண்டியதால் சடலம் அடக்கம் செய்ய இடம் கிடைக்காத நிலையிருக்கிறது. புலியகுளம் மாநகராட்சி மயானமும் இதே நிலையில் தான் இருக்கிறது. சொக்கம்புதூர் மயானம் கடந்த சில ஆண்டாக சீரமைக்கப்படவில்லை. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் கடந்த ஆண்டில் 35.97 லட்ச ரூபாய் செலவில், நகரில் உள்ள மயானம், சுடுகாடுகளை சீரமைத்துள்ளதாக கணக்கு காட்டியுள்ளது. மயானங்களை சீரமைக்க பொதுமக்கள் மனுக்களை குவித்து வரும் நிலையில், செய்யாத பணிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் பில் போட்டு கணக்கு காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநகராட்சி மயானங்களை முழுமையாக பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். மின் மயானங்கள் பராமரிப்பு தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த நிறுவனங்கள் மின் மயான வளாகத்தை முறையாக பராமரிக்காமல் ஒப்பந்த விதிகளை மீறுவதாக தெரியவந்துள்ளது. இதை தடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மயான விவகாரத்தில் மாநகராட்சி அமைதி காப்பதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.


Tags : municipality area ,
× RELATED நகராட்சி பகுதியில் டெங்கு கொசுப்புழுக்கள் அழித்தல் பணி தீவிரம்