×

‘பானி’ புயல் ஏற்பட்டால் தென்னை,வாழை மரங்களை காப்பாற்றுவதற்கான வழிமுறைகள்

ஈரோடு, ஏப். 28:
பானி புயலின் போது தென்னை மரங்களை காப்பாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து வேளாண்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.இது தொடர்பாக, ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் குணசேகரன்  கூறியிருப்பதாவது: இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையின் படி வரும் 30ம் தேதி மற்றும்  மே 1ம் தேதி பானி என்ற காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காற்றுடன் கூடிய கனமழை பெய்தால் தென்னை உள்ளிட்ட தோட்டக்கலை மரங்களை பாதுகாக்கும் வகையில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்வது அவசியமாகிறது. தென்னை மரங்களை பொறுத்த வரை மரங்களின் தலை பாகத்தில் தேங்காய், இளநீர், பச்சை ஓலை, காய்ந்த ஓலை போன்றவை அதிகம் இருந்தால் காற்றின் வேகத்தால் மரம் முழுவதும் அடியோடு சாய்வதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால், இளம் ஓலைகளை தவிர்த்து மீதமுள்ள பச்சை ஓலை மற்றும் காய்ந்த மட்டைகள், இளநீர், தேங்காய் ஆகியவற்றை வெட்டி விட வேண்டும். தலைப்பகுதி அதிக பாரம் இல்லாமல் இருந்தால் காற்றின் வேகத்தை தாங்கி நிற்கும் வாய்ப்பு மரத்திற்கு அதிகமாக இருக்கும்.

இதே போல புயல், மழை போன்றவற்றை எதிர்கொள்ளவிருக்கும் 4 நாட்களுக்கு முன்பு விவசாயிகள் தென்னந்தோப்புகளுக்கு நீர் பாய்ச்சுவதை நிறுத்திவிட வேண்டும். இதனால் தென்னையின் வேர்ப்பகுதி மண்ணில் நன்றாக இறுகி, மரம் சாய்ந்து விடாமல் பாதுகாக்க உதவியாக இருக்கும். வாழை தோப்பினை சுற்றி வாய்க்கால் எடுத்து, மழை நீர் தேங்காமல் வெளியேற வழி வகை செய்ய வேண்டும். இதே போல விவசாயிகள் தற்போது மேற்கொள்ளவிருக்கும் விதைப்பு பணிகளை காற்று, மழை முடிந்த பின் மேற்கொள்ளலாம். நெல், பயறு வகைகள், சிறுதானியங்கள், பருத்தி, கரும்பு, நிலக்கடலை சாகுபடி வயல்களில் தேங்கியிருக்கும் மழை நீர் வடிக்க உரிய வடிகால் வசதிகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : event ,storm ,Bani ,
× RELATED உங்க 10 ஆண்டு ஆட்சியில் எல்லாமே போச்சு…...