பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள்

ஈரோடு, ஏப். 28:பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இன்றி  சாக்கடையில் இறங்கி துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருவதை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.உள்ளாட்சி அமைப்புகளில் துப்புரவு பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் மாஸ்க், கையுறைகள், கால் உறைகள் உள்ளிட்ட தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து தான் பணியாற்ற வேண்டும் என்றும் இதை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவு உள்ளது. துப்புரவு பணியாளர்கள் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியாற்றுவதை கண்காணிக்க தவறினால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதார அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஈரோடு மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் பெரும்பாலும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். அதை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதே போல சாக்கடை அடைப்புகளை இயந்திரங்கள் கொண்டு தான் சரி செய்ய வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ள போதிலும் ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் ஏற்படும் சாக்கடை அடைப்புகளை துப்புரவு பணியாளர்கள் தான் சரி செய்கின்றனர். எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் அவர்கள் பணியில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.

 இது குறித்து தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சண்முகம் கூறுகையில், ‘‘துப்புரவு பணியாளர்களுக்கு சுகாதாரம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத நிலை உள்ளது. பணியின் போது நோய் தொற்று ஏற்படாமல் இருக்கவும், விஷ வாயு தாக்குதலால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும், கட்டாயம் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து கொண்டு தான் பணியாற்ற வேண்டும் என்பது கூட தெரியாமல் பணியாளர்கள்  உள்ளனர். இதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதார பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை. ஒரு சில இடங்களில் சாக்கடை அடைப்புகளை சரி செய்ய, துப்புரவு பணியாளர்களை சுகாதார பிரிவு அதிகாரிகளே வற்புறுத்துவதாகவும் புகார்கள் வருகின்றது. மேலும் துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து கொண்டு பணியாற்ற விரும்பும் நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் போதிய அளவு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத அவலநிலையையும் காணமுடிகின்றது,’’ என்றார்.

Tags : Cleaning staff ,
× RELATED வேப்பனஹள்ளியில் பாதுகாப்பு...