×

மண் எடுத்து வந்த வாகனங்கள் முற்றுகை

ஆர்.எஸ்.மங்கலம், ஏப். 28: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் உள்ள அனல்மின் நிலையம் அமைக்கும் பணிக்காக மண் அடித்து சமப்படுத்தி வருகின்ற நிலையில் நீர் நிலை பகுதிகளை ஆக்கிரமிப்பதாகக் கூறி அந்த பணிக்கு மண் எடுத்து வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி கிராமப் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உப்பூர் கிராமத்தில் சுமார் 950 ஏக்கர் நிலப்பரப்பில் தலா 800 மெகாவாட் அனல் மின் உற்பத்தி செய்யக் கூடிய இரண்டு மின் உற்பத்தி நிலையங்களை ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் அமைப்பதற்கான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையம் அமைப்பதற்காக அரசு புறம்போக்கு நிலம் மற்றும் விவசாயிகளுடைய நிலங்களை அரசு கையகப்படுத்தி இந்த பணியை செய்து வருகின்றனர். இதற்கு இப்பகுதி கிராமப் பொதுமக்கள் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலை நேற்று லாரிகள் மூலமாக மண் அடித்து தளத்தைசமப் படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது மயானம் உள்பட மழை காலங்களில் உபரிநீர் கடலுக்குச் செல்லக் கூடிய வழியையும் மண்ணை கொட்டி மேடாக ஆக்கி வந்தனர்.

இதையறித்து வந்த இளைஞர்களும், பொதுமக்களும் வாகனங்களை வழிமறித்து முற்றுகையிட்டனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் தமீம் ராஜா பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தண்ணீர் போகக் கூடிய வழியை அடைக்காமல் பணியை செய்யவும் அடுத்து சில தினங்களில் பேச்சுவார்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் கண்டிப்பாக பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வழிவகை செய்யப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : Siege ,
× RELATED லட்சக்கணக்கில் விவசாயிகள் முற்றுகை...