×

எஸ்.ஐ. உள்பட 8 பேர் நியமனம் கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

நாகர்கோவில், ஏப். 28:  கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. எஸ்.ஐ. தலைமையில் 8 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். தென் மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற தகவல் காரணமாக, தமிழகத்திலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். குறிப்பாக ரயில் நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க ஏடிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் மூலம் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். பார்சல்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இதே போல் தமிழகத்தில் ஓடும் முக்கிய ரயில்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ரயில் கன்னியாகுமரியில் இருந்து தினமும் மாலை 5.20க்கு புறப்பட்டு, 5.35க்கு நாகர்கோவில் வந்து சேரும். பின்னர் மாலை 5.45க்கு சென்னை புறப்பட்டு செல்லும்.

அதிகாலையில் சென்னை செல்லும் முக்கிய ரயில் என்பதால், தென் மாவட்ட பயணிகள் அதிகம் பேர் இந்த ரயிலில் தான் பயணிப்பார்கள். விடுமுறை தினங்களில் பயணிகள் எண்ணிக்கை  மிக அதிகமாக இருக்கும். தற்போது பாதுகாப்பு கருதி, இந்த ரயிலில் போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 3 பேர் மட்டுமே ரயிலில் பாதுகாப்புக்கு சென்று வந்தனர். தற்போது எஸ்.ஐ. ஒருவர் தலைமையில் இந்த எண்ணிக்கை 8 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. ரயில் புறப்பட்டு சென்று கொண்டு இருக்கும் போது பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்படுகின்றன. முன்பதிவு பெட்டிகள், ஏ.சி. கோச்சுகளிலும் விசாரணை நடக்கிறது. சந்தேகப்படும் படியான பொருட்கள் கிடக்கிறதா? என்பதையும் கண்காணித்து வருகிறார்கள். வழக்கமாக இந்த ரயிலில் 14 பெட்டிகள் இருந்தன. தற்போது இதன் எண்ணிக்கையும் 12 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு காரணத்துக்காக பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதா? என்பது பற்றி அதிகாரிகள் விளக்கம் அளிக்க மறுத்து விட்டனர்.

Tags : SIS ,police personnel ,
× RELATED மக்களவைத் தேர்தல் எதிரொலி.. கடலூர்...