×

நடைபாதையில் வாகனங்கள் ஆக்கிரமிப்பு

விழுப்புரம், ஏப். 28: விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் நடைபாதைகளை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். விழுப்புரம் புதிய பஸ் நிலையம் கடந்த 2000ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. தமிழகத்தின் மிகப்பெரிய பேருந்து நிலையத்தில் ஒன்றாகவும் திகழ்கிறது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் நேரடியாக பேருந்து வசதியை கொண்டுள்ளது.
தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய பேருந்து நிலையமாக இருப்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இப்படிப்பட்ட பேருந்து நிலையத்தில் குடிநீர், கழிப்பறை வசதிகள் போதுமானதாக இல்லை. துர்நாற்றம் வீசக்கூடிய சுகாதாரமற்ற முறையில் இப்பேருந்து நிலையம் காணப்படுகிறது. வாகனங்கள் வரி வசூலிக்கப்பட்டும், கடைகளுக்கு வாடகை வருவாய் கிடைத்த போதிலும் இப்பேருந்து நிலையம் சீரமைக்கப்படாமல் உள்ளது. பயணிகள் நடந்து செல்லும் நடைபாதைகளை பலர் கடைகளை வைத்து ஆக்கிரமித்துள்ளனர்.

அதேபோல், சென்னை, புதுச்சேரி, கடலூர் மார்க்க நடைபாதைகளில் தற்போது இருசக்கர வாகனங்கள் நிறுத்தி நடைபாதைகளை முழுமையாக ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் உட்காரவும், நிற்கவும் இடமில்லாமல் தவித்து வருகின்றனர். அங்கு புறக்காவல்நிலையம் இருந்தும் போலீசார் உரிய முறையில் ரோந்து சென்று நடவடிக்கை எடுப்பதில்லை என கூறப்படுகிறது.எனவே, உரிய நடவடிக்கை எடுத்து புதிய பஸ் நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை