×

அடிப்படை வசதிகள் கேள்விக்குறி நாகர்கோவில் மாநகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை

நாகர்கோவில், ஏப் 26:  நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியவுடன் வளர்ச்சித்திட்டங்கள் தானாக வந்து சேரும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் பலதரப்பு மக்கள்  மாநகராட்சியாக தரம் உயர்த்தினால் வீட்டு வரி, குடிநீர் வரி உயரும் என அச்சப்பட்டனர். அதுபோல் மாநகராட்சி ஆனபிறகு குடிநீர் முதல் அனைத்து தரப்பட்ட அடிப்படை வசதிகளும் கேள்விகுறியாக உள்ளது. ஆனால் வரி மட்டும் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சிக்கு முக்கடல் அணையில் இருந்து குடிநீர் கொண்டுவரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  கோடைகாலம் என்பதால் முக்கடல் அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. தற்போது 2 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இதன் கீழ் மைனல் 25 அடி தண்ணீர் உள்ளது. ஆனால் இந்த தண்ணீரில் 9 அடி தண்ணீர் மட்டுமே எடுக்க முடியும். அதன்பிறகு தண்ணீர் எடுக்கமுடியாத நிலை இருந்து வருகிறது. மாநகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கையால் கலெக்டரின் உத்தரவின்பேரில் பெருஞ்சாணி அணையில் இருந்து 50 கனஅடி தண்ணீர் நாகர்கோவில் மாநகராட்சி குடிநீருக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் அனந்தன்சானல் வழியாக வருகிறது. முக்கடல் அணை முன்பாக செல்லும் அனந்தன்சானலில் இருந்து பம்ப் செய்யப்பட்டு, தண்ணீர் முக்கடல் அணைக்கு கொண்டுவரப்பட்டு, பின்னர் அணையில் இருந்து கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்படுகிறது.

போதிய தண்ணீர் இல்லாததால் மாநகராட்சி பகுதிக்கு 10 நாட்கள் முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் தண்ணீர் கேன்களை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுபோல் மாநகர பகுதியில் அடிப்படை வசதிகள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இது குறித்து மாநகர பகுதி மக்கள் கூறியதாவது: நகராட்சியாக இருந்த நாகர்கோவில் மாநகராட்சியாக்கப்பட்டுள்ளது. அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்துவிட்டு வரியை உயர்த்தி இருக்கலாம். ஆனால் மாநகராட்சி என அறிவித்தவுடன் வீட்டு வரி, தொழில்வரி, குடிநீர் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் மாநகராட்சி நிர்வாகம் உயர்த்தியுள்ளது. ரூ.650 வீட்டு வரி கட்டியவர்கள், மாநகராட்சியானபிறகு ரூ.1300 கட்டவேண்டியுள்ளது. ஆனால் கடந்த 7 வருடத்திற்கு மேலாக பாதாளசாக்கடை பணி நடந்து வருகிறது. இந்த பணி இன்னும் நிறைவடையவில்லை.

இதனை போல் பல சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் மாநகர பகுதியில் பல இடங்களில் கடந்த காலங்களை போன்று குப்பைகள் தேங்கி கிடக்கும் நிலை அப்படியே உள்ளது. பெயர் அளவிற்கு மட்டும் மாநகராட்சியாக உள்ளது. முன்னதாக உலக்கை அருவி திட்டத்தை செயல்படுத்தி இருந்தால், வருடம் முழுவதும் மாநகராட்சிக்கு குடிநீர் கிடைத்து இருக்கும். ஆனால் தற்போது புத்தன்அணை திட்டம் என குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் எந்த வருடம் முடிவடையும் என்பது மக்கள் மத்தியில் கேள்விகுறியாகவே உள்ளது. இப்படி பல திட்டங்கள் முடியாமல் நீண்டுகொண்டு செல்லும் நிலையில் அடிப்படை வசதிகள் மக்களுக்கு கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும் நிலை உள்ளது. ஆனால் மக்களை பற்றி எந்தவித கவலையும் கொள்ளாமல் மாநகராட்சி, வரியை மட்டும் உயர்த்தி இருப்பது வேதனை அளிக்கிறது என்றனர்.

Tags : Nagarcoil Corporation ,
× RELATED வர்த்தக நிறுவனங்கள்,...