×

கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிரின்ஸ் எம்.எல்.ஏ. ஆய்வு

குளச்சல், ஏப்.26: குமரி மாவட்ட கடல் பகுதியில் நேற்று முன்தினம் திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டது. கடியப்பட்டணம் அந்தோணியார் தெருவில் தடுப்பு சுவரை தாண்டி கடல் நீர் விழுந்ததால் சிலுவைதாசன் என்பவரது வீடு முழுமையாக சேதமடைந்தது.மேலும் அங்கு 300 வீடுகளை கடல் நீர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட கடியப் பட்டணம்,மண்டைக்காடு புதூர் ஆகிய கிராமங்களை நேற்று குளச்சல் எம்.எல்.ஏ.பிரின்ஸ் பார்வையிட்டார்.இதில் பங்குத்தந்தையர்கள் பபியான்ஸ்,சாம் மேத்யூ,பங்கு பேரவை நிர்வாகிகள்,காங்.வட்டார தலைவர் கிளாஸ்டன்,பேரூராட்சி தலைவர்கள் மனோகரசிங்,சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.பின்னர் பிரின்ஸ் எம்.எல்.ஏ.நிருபர்களிடம் கூறியதாவது:

ஆண்டுதோறும் ஜூன்,ஜூலை மாதங்களில் குமரி மாவட்டத்தில் கடல் சீற்றமாக காணப்படும். இதனால் கடலரிப்பு ஏற்பட்டு மீனவர்களின் வீடுகள்,உடமைகள் பெரும் பாதிப்படைகிறது. கடியபட்டணம் அந்தோணியார் தெருவில் ஒவ்வொரு கடல் சீற்றத்தின்போதும் வீடுகளை கடல் நீர் சூழ்கிறது. எனவே இங்கு நிரந்தர தடுப்பு சுவர் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் 3 முறை சட்டசபையில் பேசியுள்ளேன்.மாவட்ட நிர்வாகத்திடமும் முறையிட்டுள்ளேன். இதற்கிடையே நேற்று (நேற்று முன்தினம்)ஏற்பட்ட திடீர் கடல் சீற்றத்தினால்  கடியப்பட்டணம் கிராமம் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளை பாதுகாக்க மீனவர்கள் வீடுகளை சுற்றி அடுக்கி வைத்துள்ள மணல் மூடைகளையும் கடல் நீர் இழுத்து சென்றுள்ளது. மீனவர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாய் உள்ளது.இதற்கிடையே இந்திய பெருங்கடலில் புயல் உருவாகும் என கடல் சேவை மையம் அறிவித்துள்ளது மேலும் மீனவர்களை பீதியடைய செய்துள்ளது.

எனவே கடியப்பட்டணம் அந்தோணியார் தெருவில் நிரந்தர பாதுகாப்பு கருதி அலை தடுப்பு சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கடல் சீற்ற பாதிப்பிற்கு மாவட்ட நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும்.இத்தனை நாட்களாக கடியப்பட்டணத்தில் கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டிக்கிறேன்.இதுபோல் மண்டைக்காடு புதூர் மேற்கே தோப்பில் உடைப்பு ஏற்பட்டால் ஏ.வி.எம்.கால்வாயில் கடல் நீர் பெருகி  சாலை மூழ்கும் அபாயம் உள்ளது.அப்படி ஒரு நிலை வந்தால் அங்கு 400 வீடுகளை கடல் நீர் சூளும்.எனவே ஏ.வி.எம். கால்வாயில் கடல் நீர் புகுவதை தடுக்க புதூர் மேற்கில் அலை தடுப்பு சுவர் அமைக்க வேண்டியது அவசியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Prince ,MLA ,areas ,sea fury Review ,
× RELATED ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் சிபிஐ ரெய்டு