×

எளாவூர் சோதனை சாவடியில் பறிமுதல் செய்து 4 மாதமாக பாதுகாக்கப்பட்டு வந்த 11840 லிட்டர் எரி சாராயம் அழிப்பு

கும்மிடிப்பூண்டி, ஏப். 26: கும்மிடிப்பூண்டி அருகில் எளாவூர் சோதனை சாவடியில் பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்த 11,840 லிட்டர் எரிசாராயம் திறந்த வெளியில் ஊற்றப்பட்டு தீ வைத்து அழிக்கப்பட்டது. கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடி வழியாக தினந்தோறும் ஆந்திரா, புதுடெல்லி, பீகார், ஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கனரக வாகனங்களில் காய்கறிகள் மற்றும் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் வந்து செல்வதுமாக உள்ளது. இந்நிலையில் இந்த சோதனை சாவடியில் செம்மரக்கட்டை, மணல், எரிசாராயம் உள்ளிட்டவைகள் இரவு நேரங்களில் கடத்தப்படுவதாக கடந்த டிசம்பர் 26ம் தேதி நாமக்கல் ஏ.டி.எஸ்.பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின்பேரில் 10 பேர் கொண்ட போலீசார் அவ்வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது 11,840 லிட்டர் எரிசாராயம் லாரியில் கடத்தி வரப்பட்டது தெரிந்தது. எனவே சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர். இந்த எரி சாராயம் எளாவூர் சோதனை சாவடியில் உள்ள அதிகாரிகள் அறையில் 338 கேன்களில் வைக்கப்பட்டது. இந்த சாராய கேன்கள் வைக்கப்பட்டு 4 மாதங்கள் ஆகிய நிலையில், தற்போது வெயில் காலம் என்பதால்  எப்பொழுதும் வெடிக்கலாம் என்ற அச்சம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட மதுவிலக்கு துணை கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில் 338 கேன்களில் இருந்த எரி சாராயம் நேற்று எளாவூர்  ஏழு கண்ணு பாலம் அருகே திறந்தவெளியில் தரையில் ஊற்றப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டது. அப்போது கும்மிடிப்பூண்டி தனிப்பிரிவு தலைமை காவலர் தனசாமி மற்றும் மதுவிலக்கு போலீசார் உடன் இருந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘இதேபோல் 22 ஆயிரம் லிட்டர் எரி சாராயம் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டு வெட்ட வெளியில் கடந்த 3 மாதமாக சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டுள்ளது. அறைக்குள் இருந்த சாராயத்தை அழித்துவிட்டனர். இதை எப்போது அழிப்பார்கள்? என தெரியவில்லை’’ என்றனர்.

Tags : Elavoor ,checkpoint ,
× RELATED ஆந்திர மாநில போலீசாரின் உதவியுடன்...