×

செங்கரை காட்டு செல்லியம்மன் கோயிலில் பழுதடைந்த குளியலறை கட்டிடம்

ஊத்துக்கோட்டை, ஏப். 26: செங்கரை கிராமத்தில் உள்ள காட்டுச்செல்லி அம்மன் கோயிலில் குளியல் அறை கட்டிடத்தை பராமரிக்காததால் பழுது அடைந்து கிடப்பதால் பெண் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்திவிட்டு ஈர ஆடையுடன் அவதிப்படுகின்றனர். ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியம் செங்கரை கிராமத்தில் புகழ்பெற்ற காட்டுச்செல்லி அம்மன் கோயில் உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அதன் அருகில் உள்ள குளத்தில் குளித்துவிட்டு ஈரத்துணியுடன் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினால் அம்மன் கேட்டதையெல்லாம் கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் இந்த கோயிலுக்கு ஒவ்வொரு வாரமும் வியாழன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய வருவார்கள். இந்நிலையில் கோயில் குளத்தில் குளித்து அம்மனை தரிசித்துவிட்டு வரும் பெண் பக்தர்கள் தங்களது ஈர உடைகளை மாற்ற வசதியாக கடந்த 6 வருடங்களுக்கு முன்பு எம்எல்ஏ நிதியின் கீழ் 4.75 லட்சம் செலவில் பெண்கள் கழிவறையுடன் கூடிய உடை மாற்றும் அறை கட்டப்பட்டது. ஆனால், அது 2 ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட பிறகு தண்ணீர் வசதி இல்லாததால் பயன்பாடற்று போனது. அதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் தற்போது புதர்மண்டி கிடக்கிறது.

இதனால் கோயிலுக்கு வரும் பெண் பக்தர்கள் குளிக்கவும், உடை மாற்றவும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே பக்தர்கள் நலனை கருத்தில் கொண்டு இதை சீரமைத்து பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘‘கோயிலின் பிரதான ஐதீகமே ஈர உடையுடன் அம்மனை தரிசிக்க வேண்டும் என்பது தான். இவ்வாறு செய்யும் பெண் பக்தர்களுக்கு போதுமான உடைமாற்ற இடவசதி செய்து தர வேண்டியதை கோயில் நிர்வாகமோ அல்லது சம்பந்தப்பட்ட அரசு துறையோ செய்து கொடுக்க வேண்டும். இதுபற்றி பலமுறை கோரிக்கை, புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை அலட்சியமாக எடுக்காமல் உள்ளனர். இங்குள்ள சமுதாய கூடத்தை பெண்கள் உடைமாற்ற பயன்படுத்துகிறார்கள். ஆனால், அது தற்காலிகமே. அங்கு திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தால் பக்தர்கள் அவதிப்படுகிறார்கள்.சிமென்ட் தொட்டியும், சின்டெக்ஸ் தொட்டிகளில் கூட தண்ணீர் இல்லாமல் உள்ளது. எனவே இதையும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : bathroom building ,
× RELATED முட்டுக்காட்டில் சுற்றுலா பயணிகளை...