×

வாலாஜாபாத் ஒன்றியத்தில் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமான வையாவூர் - ஏனாத்தூர் சாலை

வாலாஜாபாத், ஏப்.26: வாலாஜாபாத் ஒன்றியத்தில் வையாவூர் பாரதி நகர் - ஏனாத்தூர் வரையிலான சாலை போக்குவரத்துக்கு லயக்கற்ற நிலையில் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனை சீரமைக்காமல் அதிகாரிகள் சுணக்கம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம் வையாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாரதி நகரில் இருந்து, ஏனாத்தூர் வரை தார் சாலை சுமார் 10 கிமீ தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை ஒட்டி தர்ம நாயக்கன் பட்டறை, ராஜகுலம் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு, சுமார் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்கள் போக்குவரத்துக்கு பயன்படும் முக்கிய சாலையாக வையாவூர்  ஏனாத்தூர் சாலை விளங்குகிறது. மேலும், ஏனாத்தூர் பகுதியில் உள்ள பள்ளி மணவர்கள் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இந்த சாலை பயன்படுத்தி சென்றறு வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்  அமைக்கப்பட்ட தார் சாலை, தற்போது ஜல்லி கற்கள் ஆங்காங்கே பெயர்ந்து குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், இச்சாலையில் பயணம் செய்யும் கிராம பொதுமக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பாரதிநகர், தர்மநாயக்கன் பட்டறை ஆகிய கிராம மக்கள் காஞ்சிபுரம் உள்பட முக்கிய பகுதிகளுக்கு செல்ல, இந்த சாலையை தவிர வேலை சாலை வசதி இல்லை. இதனால், இந்த குண்டும் குழியுமான சாலைகளில் கடுமையான பாதிப்புக்குள்ளாகின்றனர். இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், இங்குள்ள பள்ளங்களில் விழுந்து காயமடைந்து செல்வது தொடர் கதையாக உள்ளது. இது ஒரு புறமிருக்க அரசு பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சைக்கிளில் செல்லும்போது டயர் பஞ்சர் மற்றும் பழுதுகள் ஏற்பட்டு பள்ளிக்கு தாமதமாக செல்கின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் அதனை சீரமைக்காமல் சுணக்கம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ள வையாவூர் - ஏனாத்தூர் சாலையை சீரமைக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : road ,Walajabad Union ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி