×

தபால் வாக்குகளை செலுத்த கால நீட்டிப்பு வேண்டும் : ஜாக்டோ - ஜியோ கோரிக்கை

காஞ்சிபுரம், ஏப்.26: தபால் வாக்குகளை செலுத்த கால நீட்டிப்பு வேண்டும் என கலெக்டரிடம், ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் தபால் வாக்குகளை 23ம் தேதி வரை செலுத்தலாம் என கலெக்டர் பொன்னையா தெரிவித்தார். ஆனால், தபால் வாக்குகளை செலுத்த வழக்கமான நடைமுறையை பின்பற்ற வேண்டும் என ஜாக்டோ ஜியோ சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் ஜாக்டோ - ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அனுக்குமார், சேகர், முகமது உசேன், லெனின், குமார் ஆகியோர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது. மக்களவை பொதுத்தேர்தலில் பணியாற்றிய அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு தபால் வாக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த தபால் வாக்குகளை சிரமமின்றி செலுத்த வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாள் வரை கலெக்டர் அலுவலகத்தில் தபால் வாக்கு பெட்டிகளை வைக்கப்படுவது நடைமுறையில் இருந்து வந்தது.

ஆனால், சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே தபால் வாக்குப் பெட்டிகள் அனைத்தும் எடுக்கப்பட்டதாக அறிகிறோம். மேலும் தபால் அலுவலகத்தின் மூலமாக தபால் வாக்குகளை அனுப்பும்படி மாவட்ட நிர்வாகத்தினர் கூறுகின்றனர். எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்களின் ஜனநாயக கடமை ஆற்ற, தபால் வாக்குகளை 100 சதவீதம் நம்பக தன்மையுடன் செலுத்த, வழக்கமான நடைமுறைப்படி கலெக்டர் அலுவலகத்தில் தபால் வாக்குப்பெட்டி வைத்து, 100 சதவீதம் வாக்குப் பதிவு செய்ய உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கடந்த ஆண்டை விட 30 சதவீதம் விற்பனை...