×

பூங்காவிற்காக ஊரணி அளவை சுருக்குவதால் நீதிமன்றம் செல்ல பொதுமக்கள் முடிவு

காரைக்குடி, ஏப்.25: காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் 13க்கும் மேற்பட்ட ஊரணிகள் உள்ளன. பெரும்பாலான ஊரணிகள் போதிய பராமரிப்பு இல்லாததால் தண்ணீர் இன்றி காய்ந்து போய் காணப்படுகிறது. தவிர ஊரணியின் உட்புறம் மண் சரிந்து மண் மேடாக காட்சி தருக்கின்றன. இந்நிலையில் நீர்நிலை மேம்பாட்டுக்கு என 3 கோடியே 96 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதில் பாப்பா ஊரணி, வடக்கு ஊரணி, இடைச்சி ஊரணி, செக்காலை அய்யனார் ஊரணி, பருப்பு ஊரணி ஆகியவை தூர்வாரி, நடைமேடை மற்றும் பூங்கா அமைத்து சுற்றுவேலி அமைக்கப்பட உள்ளது. 1வது வார்டுக்கு உட்பட்ட வடக்கு ஊரணி மற்றும் இடைச்சி ஊரணி முதற்கட்ட பணிகள் துவங்கி உள்ளன. இதில் நகராட்சி சார்பில் நடைமேடை அமைப்பதற்காக ஊரணியின் உள் அளவை சுருக்குவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சிவராமன் கூறுகையில், மூன்றரை ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த ஊரணி மன்னர் காலத்தில் வெட்டப்பட்டது. இப்பகுதியில் உள்ள 5700க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு நீராதாரமாக இந்த ஊரணிதான் உள்ளது. சங்கு சமுத்திர கண்மாய் நிறைந்து இங்குள்ள வடக்கு ஊரணி, இடைச்சி ஊரணி, கிழக்கு ஊரணி நிறையும். இது நிறைந்து புதுவெட்டு கண்மாய் மற்றும் அதல கண்மாய்க்கு சென்று அங்கிருந்து, காரைக்குடி கண்மாய்க்கு செல்லும் வகையில் வரத்து கால்வாய் இருந்தது.

தற்போது அனைத்து வரத்து கால்வாய்களும் அடைபட்டு தண்ணீர் வரத்து தடைபட்டுள்ளது. இருப்பினும் ஒரு மழை பெய்தால் கூட இந்த ஊரணியில் தண்ணீர் இருக்கும். இக்குளங்கள் வற்றியதால் இப்பகுதியில் உள்ள போர்வெல் மற்றும் கிணறுகளில் தண்ணீர் குறைந்துள்ளது. தற்போது நகராட்சி சார்பில் பராமரிப்பு என்ற பெயரில் ஊரணியில் உள் அளவு சுமார் ஒரு ஏக்கர் வரை சுருக்குகின்றன. அதற்கு பதில் ஏற்கனவே உள்ள கரையை சரி செய்து நடைமேடை அமைக்கலாம். இப்பணி தொடர்ந்தால் நீதிமன்றத்தை நாடி தடை பெறுவோம்.

செந்தில்குமார் கூறுகையில், ஊரணியை காக்க வேண்டிய நகராட்சி நிர்வாகமே அதனை சுருக்கி அழிக்க நினைக்கிறது. ஊரணியை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வரத்து கால்வாய்களை சரி செய்ய வேண்டும். ஊரணியை சுற்றி வேலி அமைக்க வேண்டும் என்றார்.
முன்னாள் கவுன்சிலர் ராமசாமி, ரூ.55 லட்சத்துக்கு மேல் இவ் ஊரணி பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. ஊரணிக்கு தண்ணீர் வரத்து உள்ள கால்வாயை சரி செய்ய வேண்டும். கண்மாயின் அளவை சுருக்காமல் பணி செய்ய வேண்டும் என்றார்.

Tags : civilians ,court ,park ,
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...