×

இரை தேடி... திண்டுக்கல் பன்றி வளர்ப்பு பிரச்னையில் ‘2வது சம்பவம்’ திண்டுக்கல்லில் வாலிபர் ஓட, ஓட வெட்டி கொலை

திண்டுக்கல், ஏப். 25: பன்றி வளர்ப்பு பிரச்னையில் திண்டுக்கல்லில் வாலிபர் ஓட, ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் ரவுண்ட்ரோடு புதூரை சேர்ந்தவர் கார்த்திக் (35). இவரது மனைவி சந்திரா. மகள் கவுசல்யா. நேற்று முன்தினம் இரவு கார்த்திக் வீட்டில் குடும்பத்துடன் அமர்ந்து உணவு சாப்பிட்டுள்ளார். பின்னர் காற்றாட வீட்டிற்கு வெளியே வந்த கார்த்திக்கை ஒரு கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வெட்ட வந்தது. இதை கண்ட அவர் உயிரை காப்பாற்றி கொள்ள அனுமந்தன்நகர் மேம்பாலத்தில் ஓடினார். எனினும் அக்கும்பல் ஓட, ஓட விரட்டி அவரை சராமரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். தகவலறிந்ததும் திண்டுக்கல் நகர் வடக்கு இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலையாளிகள் விட்டு சென்ற அரிவாள், கத்தியை கைப்பற்றினர். பின்னர் கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இக்கொலை குறித்து போலீசார் கூறியதாவது, ‘கடந்த 2012ம் ஆண்டு பன்றி வளர்ப்பதில் தற்போது கொலை செய்யப்பட்ட கார்த்திக் அண்ணன் செல்வத்திற்கும், பாரதிபுரத்தை சேர்ந்த நாட்ராயனுக்கும் பிரச்னை  ஏற்பட்டது.  இதில் நாட்ராயன், செல்வத்தை கொலை செய்தார். தனது அண்ணனை கொலை செய்தவர்களை பழிக்குப்பழி வாங்க வேண்டும் என தம்பி கார்த்திக் திட்டமிட்டுள்ளார். பின்பு இருதரப்பினரும் சமதானமடைந்துள்ளனர். வழக்கிலும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கார்த்திக் சக நண்பர்களிடம் பேசும் போது நாட்ராயனை கோஷ்டியை கொலை செய்யாமல் விட மாட்டேன் என சபதம் செய்துள்ளார். இந்த தகவல் அறிந்த நாட்ராயன் திட்டமிட்டு கார்த்திக்கை கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக பாரதிபுரத்தை சேர்ந்த நாட்ராயன் (35), பாண்டி (27) ரெட்டியபட்டியை சேர்ந்த போத்திராஜ் (30), என்எஸ்கே நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (28), அனுமந்தன் நகரை சேர்ந்த வெங்கட்ராஜ் (33) வேடபட்டியை சேர்ந்த பரமசிவம் (33) ஆகிய 6 பேரை கைது செய்துள்ளோம். மேலும் சிலரை தேடி வருகிறோம்’ என்றனர்.

Tags : event ,Dindigul ,
× RELATED உங்க 10 ஆண்டு ஆட்சியில் எல்லாமே போச்சு…...