×

குடியாத்தம் அருகே கிராமம் முழுக்க பதுக்கி வைத்திருந்த 10 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றி அழிப்பு 2 பேரிடம் விசாரணை

வேலூர், ஏப்.26: குடியாத்தம் அருகே கிராமத்தில் ஆங்காங்கே பதுக்கி வைத்திருந்த 10க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றி செயல் இழக்க செய்தனர்.வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த நெட்டேரி கிராமம் வனப்பகுதி அருகே உள்ளது. தற்போது கோடை காலம் காரணமாக தண்ணீர் மற்றும் உணவின்றி தவிக்கும் காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் கிராமத்திற்குள் வந்து, விவசாய பயிர்களை நாசம் செய்கின்றன. அவ்வாறு, வரும் காட்டுப்பன்றிகளை வேட்டையாட மர்ம நபர்கள் நிலங்களில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைக்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரு நாய் விவசாய நிலத்தில் இருந்த நாட்டு வெடிகுண்டை எடுத்துக்கொண்டு ஊருக்குள் போட்டுள்ளது அப்போது, அவ்வழியாக வந்த பைக் அதன்மீது ஏறியதில் நாட்டு குண்டு வெடித்து சிதறியதில் பைக்கில் வந்த வாலிபர் கீழே விழுந்து லேசான காயம் அடைந்தார்.

சிறிது நேரத்தில் அதே பகுதியில் இருந்த மற்றொரு ெதருவில் கிடந்த நாட்டு வெடிகுண்டை அங்கிருந்த நாய் கடித்ததில் தலை துண்டாகி பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் தாலுகா இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிராமங்களில் ஆங்காங்கே வீசப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை, அப்பகுதி மக்கள் கைப்பற்றி போலீசாரிடம் கொடுத்தனர். அவற்றை போலீசார் செயலிழக்க செய்தனர். அப்போது, ‘இனிமேல் இவ்வாறு நாட்டு வெடிகுண்டுகளை நிலங்களில் மற்றும் தெருக்களில் பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ போலீசார் எச்சரித்தனர்.இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஆதிமூலம், சுரேஷ் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கிராமம் முழுக்க நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்த சம்பவம் அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Tags : Investigation ,Gudiyatham ,village ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல்...