×

தோகைமலை அருகே வாலியம்பட்டியில் முத்தாலம்மன் கோயிலில் மாலை தாண்டும் திருவிழா நூறுக்கணக்கான சலை எருதுகள் பங்கேற்பு

தோகைமலை, ஏப்.26: தோகைமலை அருகே உள்ள வாலியம்பட்டியில் நடந்த மாலை தாண்டும் திருவிழாவில் நூற்றுக்கணக்கான சலை எருது மாடுகள் (சலங்கைகளால் அலங்கரிக்கப்பட்ட மாடுகள்) கலந்து கொண்டன.கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள ஆர்.டி.மலை ஊராட்சிக்கு உட்பட்ட வாலியம்பட்டியில் வசிக்கும் கம்பலத்து நாயக்கர் சமூகத்தினருக்கு கோனதாதாநாயக்கர் மந்தையில் முத்தாலம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாலை தாண்டும் திருவிழா நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கப்பட்டது. அன்று முதல் இப்பகுதி பக்தர்கள் 9 நாள் விரதமிருந்து கோனதாதாநாயக்கர் மந்தையில் உள்ள முத்தாலம்மனுக்கு தினமும் 3 கால சிறப்பு பூஜைகளை செய்து வழிபட்டு வந்தனர். இதனை தொடர்ந்து முதல் நாள் திருவிழாவில் முத்தாலம்மனுக்கு கரகம் பாலித்து வான வேடிக்கையுடன் வீதி உலா வந்தது. 2ம் நாள் அன்று பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், கிடா வெட்டுதல் உள்பட பல்வேறு நேர்த்திக்கடன்களை செய்து பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். 3ம் நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாலை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் கோப்பா நாயக்கர் மந்தை, பேரூர் தாதல்மாதல் நாயக்கர் மந்தை, கஸ்தூரிரெங்கம நாயக்கர் மந்தை, பிட்டம நாயக்கர் மந்தை, காட்டி நாயக்கர் சீல் நாயக்கர் மந்தை, கோல கம்புளி நாயக்கர் மந்தை, கோட்டூர் மந்தா நாயக்கர் மந்தை, பசிபேரு நாயக்கர் மந்தை, சின்னகாட்டு பாப்பா நாயக்கர் மந்தை, உடுமி சீல் நாயக்கர் மந்தை, ராஜ கோடங்கி நாயக்கர் மந்தை, அய்யாசீமை மந்தா நாயக்கர் மந்தை, ஐந்து மந்தை உப்பு மந்தா நாயக்கர் மந்தை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 14 மந்தையர்கள் மாலைதாண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தனர். இவர்களை வாலியம்பட்டி கோனதாதாநாயக்கர் மந்தை சார்பாக வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் முத்தாலம்மன் கோயில் முன் அனைத்து மந்தைகளின் சலை எருது மாடுகளுக்கு புன்னிய தீர்த்தம் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தாரை தப்பட்டை உருமி முழங்க கோனதாதாநாயக்கர் மந்தை எதிரே சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள மணல்மேடு எல்லைசாமி கோயிலுக்கு சலை எருது மாடுகளை அழைத்து சென்றனர். அங்கு உள்ள எல்லைசாமி கோவிலில் சிறப்பு அபிசேகம் செய்து அனைத்து சலை எருது மாடுகளுக்கும் புன்னிய தீர்த்தம் தெளித்து மாலை ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.

அங்கிருந்து கோனதாதாநாயக்கர் மந்தையில் அமைக்கப்பட்ட மாத்தால் ஆன எல்லை கோட்டை நோக்கி சுமார் 500 க்கும் மேற்பட்ட சலை எருது மாடுகள் ஓடி வந்தது. இதில் ராஜ கோடங்கி நாயக்கர் மந்தை மாடு முதலாவதாக வந்தது. 2 வதாக கோல கம்புளி நாயக்கர் மந்தை மாடு வெற்றியின் எல்லை கோட்டை தாண்டியது. அப்போது இவர்களின் சமூக வழக்கப்படி 3 கன்னி பெண்கள் வைத்திருந்த மஞ்சல் பொடியினை முதல் மற்றும் 2 வதாக வந்த சலை எருது மாடுகள் மீது தூவி வரவேற்று எழும்பிச்சை பழம் பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் மஞ்சல் பொடி வைத்திருந்த 3 கன்னி பெண்களை எல்லை கோட்டிலிருந்து தேவராட்டத்துடன் முத்தாலம்மன் கோயிலுக்கு அழைத்து வந்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட முத்தாலம்மனின் கரகத்தை மஞ்சல் நீராட்டுடன் வீதி உலாக எடுத்துச்சென்று சாமிக்கு வழி அனுப்பி வைத்தனர். இதில் ஊர்நாயக்கர், மந்தா நாயக்கர் உட்பட திருச்சி, திண்டுக்கல், கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Hundreds ,evening festivities ,Valiyampatti ,Thokkimalai ,Muthalamman Temple ,
× RELATED வாழும் நரகமான காசாவில், தண்ணீருக்காக...