×

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம், வெள்ளி வென்ற திருச்சி வீரர், வீராங்கனை கலெக்டர் வாழ்த்து

திருச்சி, ஏப்.26:  ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை கோமதி மற்றும் வெள்ளி வென்ற வீரர் ஆரோக்கிய ராஜிவ் ஆகியோருக்கு திருச்சி கலெக்டர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.  திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முடிகண்டம் என்ற கிராமத்தில் மாரிமுத்து மற்றும் ராஜாத்தி தம்பதிகளின் மகள் கோமதி.  இவர் எம்.ஏ வரை படித்துள்ளார். இவர் தற்போது கத்தார் நாட்டின் தோகா நகரில் நடைபெற்று வரும் 23 வது ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கத்தினை வென்று சாதனை படைத்துள்ளார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து குக்கிராமத்தில் வளர்ந்து வந்த இவர் பல தடைகளைத் தாண்டி சாதனைகள் படைத்துள்ள இவருக்கு வருமானவரித்துறையில் பணி வழங்கப்பட்டு பெங்களுரில்  பணியாற்றி வருகிறார்.

வெற்றிக்காகப் பாடுபட்ட இவரது தந்தை காலமானதும் இவரது தாயார் ராஜாத்தி அம்மாள் மற்றும் அண்ணன் சுப்பிரமணியன் ஆகியோர் ஊக்குவித்து வருகிறார்கள். 23வது ஆசிய தடகளப் போட்டியில் தங்கப் பதக்கத்தினை வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் திருச்சி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை கோமதியினை கலெக்டர் சிவராசு பாராட்டி இதுபோன்று பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று சாதனைகளைப் படைக்கவேண்டுமாறு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மேலும் இவரது வெற்றிக்காகப் பாடுபட்டவர்களுக்கும் மற்றும் பயிற்சியளித்த பயிற்சியாளர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.

அதே போல்  திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடி தாலுகா, வழுதியூர் கிராமத்தில் வசிக்கும் சவுந்தர்ராஜன் மற்றும் லில்லிசந்திரா தம்பதிகளின் மகன் ஆரோக்கியராஜீவ். இவர் இந்திய ராணுவத்தில் மெட்ராஸ் ரெஜ்மென்ட் சென்டர் வில்லிங்டன் ஊட்டியில் பணிபுரிந்து வருகிறார்.  தற்போது கத்தார் நாட்டின் தோகா நகரில் நடைபெற்று வரும்  23வது ஆசிய தடகளப் போட்டியில்  4x400மீ. கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்டு வெள்ளி பதக்கத்தினை பெற்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும், திருச்சி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். ஆரோக்கிய ராஜீவ்வை இந்திய அரசு கவுரவித்து அர்ஜுனா விருது வழங்கியுள்ளது. இவருக்கும் வாழ்த்துக்களை கலெக்டர் சிவராசு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tags : tournament ,veteran ,Trichy ,Asian Athletics ,silver medalist ,
× RELATED ஐதராபாத்தில் நடந்த பூப்பந்து...