×

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருச்சி, ஏப். 26: ரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. மே 3ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் சித்திரை மாதம் நடைபெறும் தேர் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த விழாவில் தேரோட்டத்தில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் இருந்து கிராமமக்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இத்தகைய சிறப்புமிக்க சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இதையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார். 3.45 மணிக்கு கொடி மரம் மண்டபத்தை அடைந்தார். காலை 4.30 மணிமுதல் 5.15 மணிக்குள் மீன லக்னத்தில் சித்திரை தேர்திருவிழாவின் கொடியினை அர்ச்சகர்கள் ஏற்றினர். 6 மணிக்கு கொடி மண்டபத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள் 6.30 மணிக்கு கண்ணாடி அறையை அடைந்தார்.

மாலை 6.30 மணி வரை பேரிதாடனம் நடைபெற்றது.  மாலை 6.30 மணிக்கு உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் புறப்பட்டார். சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இரவு 8.30 மணிக்கு சந்தன மண்டபத்தை அடைந்தார். இரவு 9 மணி முதல் நள்ளிரவு 1 மணிவரை யாகசாலையில் திருமஞ்சனம் கண்டருளினார். விழாவின் 4ம் திருநாளான 28ம் தேதி மாலை 6 மணிக்கு நம்பெருமாள் கருடவாகனத்தில் சேவையும், மே 1ம் தேதி நெல் அளவு நம்பெருமாள் கண்டருளுகின்றார். 9ம் திருநாளான மே 3ம் தேதி சித்திரை தேரோட்டம் காலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
 விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : festival ,Chiranchira Chiranjeevi ,Ranganathar Temple ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!