×

ஓசூரில் தொல்லியல் துறை தேசிய கருத்தரங்கு

ஓசூர், ஏப்.26: ஓசூரில் தொல்லியல் துறையின், 11வது தேசிய கருத்தரங்கு நடந்தது. இதில் 5 வரலாற்று ஆய்வு புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள இந்திய தொல்லியல், தொல் அறிவியல் ஆய்வு நிறுவனம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம் இணைந்து, ஓசூர் பிஎம்சி பொறியியல் கல்லூரி அரங்கில், 11வது ஆண்டு தேசிய கருத்தரங்கத்தை 2 நாட்கள் நடத்தின. முதல்நாள் கருத்தரங்கு நிகழ்வுக்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜோதி ஜெகராஜன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏவும், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவருமான மனோகரன், வரலாற்று ஆய்வு மையத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினார். மைசூர் இந்திய தொல்லியல் தொல் அறிவியல் ஆய்வு நிறுவன செயலாளர் சம்பத், ஆய்வு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை வாசித்தார்.

இந்த விழாவில், சென்னை வணிகவரி இணை ஆணையர் தேவேந்திர பூபதி கலந்துகொண்டு வரலாற்று மையத்தின், ‘கிருஷ்ணகிரி ஊரும் பேரும்’, ‘மல்லப்பாடி தொல் கிராமம்’, ‘காவேரிப்பட்டணம் செப்பேடுகள்’, ‘அத்திமுகத்து அழகிய சோளீஸ்வரம்’, ‘கெவிச் சித்திரங்கள்’ ஆகிய 5 நூல்களை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். இந்த நூல்களை இயற்றிய ஆசிரியர்களான சுகவனமுருகன்,  கோவிந்தராஜன், சீனிவாசன், பரந்தாமன் ஆகியோருக்கு, பிஎம்சி கல்வி நிறுவன தலைவர் பெருமாள் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். இந்த கருத்தரங்கில், மைசூர் இந்திய தொல்லியல் தொல் அறிவியல் ஆய்வு நிறுவன தலைவர் சத்தியமூர்த்தி, சென்னை கே.வி.சர்மா ஆய்வு மைய தலைவர் ராமன், கருத்தரங்க செயலாளர்  சுகவனமுருகன், தொல்லியல் அறிஞர் விழுப்புரம் வீரராகவன், மற்றும் மைசூர், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரலாற்று ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : National Seminar on Archeology Department ,Hosur ,
× RELATED ஓசூர் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ