×

சோலார் மின்வேலியில் சிக்கி பலியான தொழிலாளி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

தேன்கனிக்கோட்டை, ஏப்.26: தேன்கனிக்கோட்டை அருகே, சோலார் மின்வேலியில் சிக்கி இறந்த தொழிலாளிக்கு இழப்பீடு வழங்கக்கோரி, அவரது உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அனுமந்தபுரம் ஊராட்சி, நெல்குந்தி கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் மகன் முருகேசன்(35). கூலித்தொழிலாளியான இவருக்கு வசந்தா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.  இவர் எஸ்.பாளையம்  கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி, கடந்த 10 ஆண்டுகளாக  கூலி வேலை செய்து வந்தார். இந்த தோட்டத்தில் யானைகள் புகாமல் தடுக்க, சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், தோட்டத்தில் வேலை செய்யும் போது, எதிர்பாராத விதமாக சோலார் மின்வேலியை முருகேசன் தொட்டார். அப்போது மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே அவர் உடல் கருகி உயிரிழந்தார்.

தகவலின் பேரில், தேன்கனிக்கோட்டை போலீசார், முருகேசனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வந்த முருகேசனின் உறவினர்கள், நிலத்தின் உரிமையாளரிடம் இருந்து இழப்பீடும், அரசின் நிதியுதவியையும் பெற்றுத்தரக்கோரி, உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவலறிந்து அங்கு வந்த தளி பிரகாஷ் எம்எல்ஏ மற்றும் போலீசார், அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், நிலத்தின் உரிமையாளர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவித்தார். அதை தொடர்ந்து, உயிரிழந்த முருகேசன் குடும்பத்துக்கு, நிலத்தின் உரிமையாளரிடம் இழப்பீடும், அரசின் நிதியுதவியும் பெற்று தரப்படும் என உறுதியளித்தார். இதனால், சமாதானமடைந்த முருகேசனின் உறவினர்கள், மதியம் 3 மணிக்கு மேல் அவரது உடலை வாங்கிச்சென்றனர்.

Tags : Soldiers ,solar power worker ,
× RELATED ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய சிஆர்பிஎஃப் வாகனம்: 4 வீரர்கள் படுகாயம்