×

சுசீந்திரம் அருகே தூங்கி கொண்டிருந்த மனைவி முகத்தில் டார்ச் லைட் அடித்ததை கண்டித்த மீனவர் சரமாரி வெட்டிக்கொலை 8 பேர் கும்பல் வெறிச்செயல்


சுசீந்திரம், ஏப். 25 : சுசீந்திரம் அருகே தூங்கி கொண்டு இருந்த மனைவி மீது டார்ச் லைட் அடித்ததை கண்டித்த, மீனவர் சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 8 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள மேலமணக்குடி லூர்து மாதா தெருவை சேர்ந்தவர் வின்சென்ட் (35). மீனவர். இவரது மனைவி தஸ்நேவிஸ் மேரி சஜினி (24). வின்சென்ட் நேற்று முன் தினம் இரவு காற்றோட்டத்துக்காக தனது வீட்டுக்கு அருகில் உள்ள லூர்து மாதா குருசடி அருகே மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கி கொண்டு இருந்தார். நள்ளிரவு 12 மணியளவில் கீழமணக்குடியை சேர்ந்த கிதியோன் என்பவர் தனது கூட்டாளிகளுடன் அங்கு வந்துள்ளார். அப்போது அவர் தனது கையில் இருந்த டார்ச் லைட்டை தூங்கி கொண்டு இருந்த தஸ்நேவிஸ் மேரி முகத்தில் அடித்துள்ளார். திடீரென முகத்தில் வெளிச்சம் விழுந்ததும், தஸ்நேவிஸ் திடுக்கிட்டு விழித்தார். அப்போது கிதியோன் டார்ச் லைட்டுடன் நின்று கொண்டு இருந்தார்.  சத்தம் கேட்டு கண் விழித்த வின்சென்ட், கிதியோனிடம் பெண்கள் உறங்கிக்கொண்டு இருக்கும் பகுதியில் எப்படி டார்ச் லைட் அடித்து பார்க்கலாம் என கூறி கண்டித்துள்ளார். இதனால் வின்சென்ட்டுக்கும், கிதியோனுக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் கிதியோனுக்கு ஆதரவாக வந்த மேலமணக்குடியை சேர்ந்த ஜஸ்டின், வின்சென்ட் முகத்தில் கல்லால் தாக்கினார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வர தகராறு முற்றியது. ஆத்திரம் அடைந்த கிதியோன் மற்றும் அவருடன் வந்தவர்கள் அரிவாளால் வின்சென்ட்டை சரமாரியாக வெட்டினர். கம்பாலும் மாறி, மாறி தாக்கினர். இதை பார்த்ததும் தஸ்நேவிஸ் மற்றும் அவரது குழந்தைகள் அலறினர். பின்னர் அந்த கும்பல் வின்சென்ட்டையும், தஸ்நேவிசையும் மிரட்டி விட்டு தப்பினர். இந்த அரிவாள் வெட்டில் வின்சென்ட்டுக்கு பின் தலை, வலது தோள்பட்டை, இடது கை மற்றும் உடம்பில் பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே வின்சென்ட் பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து அறிந்ததும் சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சித்தார்த் சங்கர்ராய் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதிரடிப்படை போலீசாரும் குவிக்கப்பட்டனர். கொலை செய்யப்பட்ட வின்சென்ட் உடல், பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து வின்சென்ட் மனைவி தஸ்நேவிஸ் மேரி சஜினி அளித்த புகாரின் அடிப்படையில் கிதியோன், மேல மணக்குடியை சேர்ந்த ஜஸ்டின், லாடஸ், அந்தோணி, அகில், நிகில், அஸ்வின், பாண்டியன் ஆகிய 8 பேர் மீது கொலை உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் தலைமறைவாக உள்ளனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.உடலை வாங்க மறுத்து போராட்டம் வின்சென்ட் கொலையில் தொடர்பு உடையவர்களை பிடிக்க டி.எஸ்.பி. பாஸ்கரன் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையே கொலையாளிகளை கைது செய்யும் வரை வின்சென்ட் உடலை வாங்க மாட்டோம் என கூறி, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி பிணவறை முன் திரண்ட உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கும் போலீசார் குவிக்கப்பட்டனர். இது குறித்து வின்சென்ட் உறவினர்கள் கூறுகையில், கிதியோன் உள்ளிட்டோர் திட்டமிட்டு வின்சென்ட்டை வெட்டி கொலை செய்துள்ளனர். அவரை சரமாரியாக வெட்டி விட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை கம்பாலும் தாக்கினர். கொடூரமாக கொலை செய்தவர்களை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும். அப்போது தான் வின்சென்ட் உடலை வாங்குவோம். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்றனர். போலீசார் தொடர்ந்து அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

Tags : Fisherman Saramari Vettikkalai ,gang mongers ,Susindram 8 ,