×

திறந்த 9 மாதத்தில் வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தம்

ஈரோடு, ஏப். 25:  காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. பவானி ஆற்றில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், சுமார் 15 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது. இந்தாண்டு அணையில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு இருந்ததையடுத்து ஆகஸ்ட் 1ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது 9 மாதங்களில் இரண்டு போகங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் மஞ்சள், கரும்பு, வாழை, எள் உள்ளிட்டவை பயிரிடப்பட்டது. தற்போது பவானிசாகர் அணையின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருவதால் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 5.9 டிஎம்சி தண்ணீர் இருப்பு இருந்தது. ஆனால், இந்தாண்டு 5.3 டிஎம்சி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டது. ஆற்றில் வரும் தண்ணீர் நாளை வரை வர வாய்ப்பு உள்ளதால் அதன் பிறகு தண்ணீர் முழுமையாக நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் குறிப்பாக காலிங்கராயன் பாசன பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்து வருவதால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ள போதிலும் நிலுவை பயிர்களை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் நிறுத்தம் செய்யப்படுவதையடுத்து வாய்க்காலில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை முழுமையாக அகற்றும் பணி ஒரு வாரகாலத்திற்குள் தொடங்கப்படும் என்றும், பழுதடைந்துள்ள மதகுகள், வாய்க்கால் கரைகள் ஆகியவை செப்பணிடும் பணி தொடங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Water opening ,walkway ,
× RELATED தமிழ்நாட்டுக்கு 22,800 காவிரி நீர்...