தாம்பரம் அடுத்த எருமையூரில் பயங்கரம் கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை

சென்னை, ஏப். 25: தாம்பரம் அருகே எருமையூரில் கல்லூரி மாணவர் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். முட்புதரில் கிடந்த அவரது சடலத்தை மீட்டு, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் அருகே பழந்தண்டலம் அம்பேத்கர் சாலையை  சேர்ந்தவர் பாஸ்கர். அதிமுக பிரமுகர். இவரது மகன் தீபக்ராஜ் (24). இவர், குரோம்பேட்டையில் ஒரு தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு  ஐ.டி படித்து வந்தார்.  கடந்த திங்கட்கிழமை போரூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு தனது நண்பர்களுடன் தீபக்ராஜ் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பாஸ்கர் தனது மகன் தீபக்ராஜை தேடியும் கிடைக்கவில்லை. செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. எனவே குன்றத்தூர்  போலீசில் நேற்று முன்தினம் பாஸ்கர் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் தாம்பரம் அருகே எருமையூர் காட்டு பகுதியில் நேற்று முன்தினம் இரவு வெட்டுக்காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக சோமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் பழந்தண்டலத்தை சேர்ந்த தீபக்ராஜ் மாயமானது தெரிந்தது. இதையடுத்து தீபக்ராஜின் உறவினர்களை வரவழைத்து, வாலிபரின் உடலை அடையாளம் காட்டினர். இதில் தீபக்ராஜ்தான் என்பது உறுதியானது. அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில்  தீபக்ராஜ் தனது நண்பர்களுடன் போரூரில் நடந்த திருமணத்துக்கு சென்றிருந்தனர். அங்கு இவர்களுக்கும், மற்றொரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் பிறகே தீபக்ராஜ் மாயமானது உறுதியானது.  எனவே திருமண வீட்டில் நடந்த நகராறில் தீபக்ராஜை யாரேனும் கடத்தி கொலை செய்தார்களா? நண்பர்களுடன் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோனங்களில் போலீசார் அவரது நண்பர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : college college student ,
× RELATED மணப்பாறை அருகே கல்லூரி மாணவி காரில் கடத்தல்சுங்கச்சாவடியில் பரபரப்பு