×

முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து சங்கரன்கோவில் நகராட்சியை திமுக கூட்டணியினர் முற்றுகை

சங்கரன்கோவில், ஏப். 25:  சங்கரன்கோவில் நகர பகுதியில் முறையாக குடிநீர் விநியோகிக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கை மனு அளித்தனர். சங்கரன்கோவில் நகராட்சி பகுதிக்கு கோட்டமலை, மானூர் கூட்டுக்குடிநீர் திட்டம், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் பெறப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், கோட்டமலை பகுதியில் இருந்து தண்ணீர் வரத்தில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2 மாதங்களாக பரவலாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், கோட்டமலையில் இருந்து தண்ணீர் வராததால், சில பகுதிகளில் 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்ப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் நேற்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திமுக நகர செயலாளர் சங்கரன், மதிமுக நகர செயலாளர் ஆறுமுகசாமி, திமுக மாவட்ட இலக்கிய அணி சுப்பையா, காங்கிரஸ் நகர தலைவர் உமாசங்கர், இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் குருசாமி, மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் அசோக்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் நகராட்சி மேலாளர் லட்சுமணனிடம் மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது: சங்கரன்கோவில் நகருக்கு 3 குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் பெறப்பட்டும், பொதுமக்களுக்கு 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. நகர் பகுதிகளில் சில குறிப்பிட்ட தெருக்களுக்கு 5 நாட்களுக்கு ஒரு முறையும், மற்ற தெருக்களுக்கு 20 நாட்களுக்கு ஒரு முறையும் பாரபட்சமாக நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுகுறித்து நகராட்சி அலுவலர்களிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குடிநீர் பிரச்னையை ஒருவார காலத்திற்க்குள் சரிசெய்யாவிட்டால் நகராட்சி பகுதிகளில் உள்ள 30 வார்டுகளிலும் உள்ள மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முகைதீன் அப்துல் காதர் பேச்சுவார்ததை நடத்தினார். இப்பிரச்னை தொடர்பாக நகராட்சி அதிகாரிகள், அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட வேண்டுமென திமுக கூட்டணியினர் வலியுறுத்தினர். குடிநீர் பிரச்னை விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : Sarkar Kovil ,allies ,DMK ,
× RELATED பெரம்பலூரில் அம்பேத்கர் சிலைக்கு...