×

முசிறி நகர் பகுதியில் அனுமதியில்லாத வழித்தடங்களில் செல்லும் மினி பஸ்கள் கண்டுகொள்ளாத போக்குவரத்து போலீசார்

தா.பேட்டை, ஏப்.24: முசிறியில் அனுமதி இல்லாத வழித்தடங்களில் செல்லும் மினி பேருந்துகளை போலீசார் முறைப்படுத்தி விடாமல் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.  முசிறியில் நகர் பகுதிக்குள் சென்று வர வசதியாக மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆனால், பொதுமக்களின் நலனை பற்றி அக்கறை இல்லாமல் மினி பேருந்துகள் உரிமையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நகர்வலம் வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து வழக்கறிஞர் செந்தில் என்பவர் கூறுகையில், முசிறி நகரிலுள்ள தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை, சப்.ஜெயில், கருவூலம் மற்றும் தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகம், முசிறி கல்வி மாவட்ட அலுவலர் அலுவலகம், பயர் சர்வீஸ் அலுவலகம், பைபாஸ் ரோடு உள்ளிட்ட குறிப்பிட்ட சில இடங்களுக்கு செல்வதற்கு வசதியாக மினி பேருந்துகள் இயக்கப்பட்டது. இதன் மூலம் ஏழை எளிய நடுத்தர மக்கள், முதியோர், உடல் ஊனமுற்றோர் ஒரு சிறிய நகர்புறத்தின் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குறைந்த கட்டணத்தில் சென்று வருவதற்கு ஏதுவாக இருந்தது. ஆனால் தற்போது அதன் நோக்கம் சிதைந்துள்ளது.  


தற்போது மினி பேருந்துகள் ரூட் பர்மிட் இல்லாத சாலைகள் வழியாக பயணித்து செல்கிறது. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன் அரசின் விதிமீறல் அப்பட்டமாக நடக்கிறது. குறிப்பாக எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டால் பர்மிட் இல்லாத சாலையில் சென்ற தவறுக்காக விபத்தில் பாதிக்கப்படும் பயணிகள் அதற்கான நஷ்ட ஈட்டை பெற முடியாத சூழல் ஏற்படும். அருகிலுள்ள சுற்றுப்புற கிராமத்திலிருந்து பயணிகளை ஏற்றி வரும் மினி பேருந்துகள் அதற்குரிய நேரத்தை சரியாக கடைப்பிடிப்பதாக தெரியவில்லை. பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் அதற்குரிய வழித்தடத்தில் சரியான நேரத்தில் சென்றுவர வேண்டும் என்பதே போக்குவரத்து விதியாக இருக்கும் நிலையில் பல மினி பேருந்துகள் தங்கள் இஷ்டம் போல உரிமையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப இயக்கப்படுகிறது.

இருசக்கர வாகனத்தில் செல்வோரிடம் ஹெல்மெட் உள்ளதா, லைசன்ஸ் உள்ளதா என பல்வேறு விசாரணைகளை மேற்கொண்டு வாகன சோதனை என்ற பெயரில் அப்பாவி மக்களை உருட்டி, மிரட்டும் போக்குவரத்து போலீசாரும், சாலை விதிகளை முறையாக பேருந்துகளின் உரிமையாளர்கள் பின்பற்றுகின்றனரா என்பதனை கண்காணிக்க வேண்டிய மோட்டார் போக்குவரத்து அலுவலர்களும் கண் மூடி இருப்பது வேதனையாக உள்ளது.  இது தவிர அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக மினி பேருந்துகளின் நடத்துனர்கள் பயணிகளிடம் வாங்குவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. எனவே முசிறி நகர்ப்பகுதிகளில் செல்லும் மினி பேருந்துகள் அதற்குரிய வழித்தடத்தில் சரியான நேரத்தில் செல்கிறதா, பயணிகளிடம் முறையான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணித்து முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க திருச்சி கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.

Tags : area ,Musiri Nagar ,routes ,
× RELATED நீல நிறத்தில் புதிய தாழ்தள டவுன்...