×

கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகத்தின் பின்னால் சாக்கடையில் தேங்கி கிடக்கும் கழிவுநீரால் துர்நாற்றம்

கூத்தாநல்லூர், ஏப்.25: கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகத்தின் அருகில் வாய்க்கால்போல ஓடும் சாக்கடையை தூய்மைப்படுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி பகுதிகளில் பல இடங்களில் சாக்கடை கழிவுகள் தேங்கிக்கிடப்பதால் ஆங்காங்கே துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்களின் சுகாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சாக்கடையில் கலந்து அந்த சாக்கடை ஓடாமல் தேங்கி நிற்பதால் சாக்கடை தூர்நாற்றம் வீசுகிறது. இதனை பொக்லைன் இயந்திரங்களை கொண்டு தூர்வாருவதுடன் வாய்க்கால்களை அகலப்படுத்தி தந்தால் சாக்கடை கழிவுநீர் தேக்கமின்றி ஓடும். துர்நாற்றம் வீசுவதும் தடுக்கப்படும்.

தற்போது பெய்யும் மழை தண்ணீரும் இந்த சாக்கடையுடன் கலந்து மேலும் பிரச்சனைகளை உருவாக்கி சுகாதாரத்தை பாதிக்கும் எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. குறிப்பாக லெட்சுமாங்குடி -திருவாரூர் பிரதான சாலை, ஏ.ஆர்.ரோடு, பெரியகடைத்தெரு , ஆஸ்பத்திரி ரோடு ஆகிய இடங்களில் உள்ள சாக்கடையில் கழிவுநீர் ஓடாமல் தேங்கிய நிலையில் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகின்றனர். கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகம் இயங்கி வரும் இடத்திற்கு அருகாமையிலேயே சாக்கடையில் கழிவுநீர் தேங்கிகிடக்கும் நிலை இருந்து வருகிறது.

இதனருகில்தான் பொது விநியோக குடிநீர் தொட்டியும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அன்றாடம் துப்புரவு பணியாளர்கள் கூத்தாநல்லூர் வீதிகளில் தேங்கும் குப்பைகளை லாரியில் ஏற்றி அப்புறப்படுத்துவதைப்போல, கூத்தாநல்லூர் நகரப்பகுதியில் ஆங்காங்கே தேங்கிநிற்கும் சாக்கடை கழிவு நீரோடையை உடனடியாக இயந்திரங்கள் மூலம் தூய்மைப்படுத்த நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

Tags : Koothanallur ,
× RELATED கோரையாற்றங்கரையில் பனை விதைகள் நடும் விழா