×

முத்துப்பேட்டை அருகே ஏரிநீரை இன்ஜின் வைத்து இறைத்து விரயம் செய்வதை தடுக்க வேண்டும் நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு கோரிக்கை

முத்துப்பேட்டை, ஏப்.25: முத்துப்பேட்டை அருகே 54 ஏக்கர் பரப்பளவுள்ள மங்கல் பெரிய ஏரியில் நிரம்பிய நீரை இன்ஜின் வைத்து இறைத்து விரயம் செய்வதை தடுக்க வேண்டுமென கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள  மங்கலூரில் பரந்து விரிந்த சுமார் 54 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி அமைந்துள்ளது. இதன்மூலம் மங்கலூர் உட்பட நம்மங்குறிச்சி, கோவிலூர், தெற்குகாடு பகுதி விவசாய நிலங்களுக்கு பாசனவசதியை பெற்று வருகிறது. மேலும் ஏரியின் நீர் ஆதாரத்தைக்கொண்டு அப்பகுதியில் பம்ப்செட் பாசனமும் முன்பு  செயல்பட்டு வந்தது. இந்த ஏரிக்கு பட்டுக்கோட்டை சாலையில் செல்லும் பாமணியாற்றிலிருந்து பெருகவாழ்ந்தான் வாய்க்கால் வழியாக தண்ணீர் வந்து நிரம்பும். மங்கலூர் ஏரி நீண்ட காலமாக தூர்வாரப்படவில்லை.

இதனால் மண் நிரம்பி மேடுதட்டி ஏரி முழுவதும் வேலிகாட்டாமணக்கு செடிகள் மண்டி கிடந்தது. மேலும் சுற்றுப்புறமும் ஏரியை பலரும் ஆக்கிரமிப்பு செய்ததால் ஏறி சுருங்கி குட்டையாக மாறி வருகிறது. மேலும் இந்த ஏரிக்கு வரும் நீர்வழிப்பாதையும் ஆக்கிரமிக்கப்பட்டதால் ஆற்றுநீர் வரத்து இல்லாமல் போனது. அதேபோல் கடந்த சில ஆண்டுகளாக எப்பொழுதும் பெய்யும் பருவமழையும் இல்லாததால் முற்றிலும் மக்களுக்கும் விவசாயத்திற்கும் பயன்படாத வகையில் மங்கலூர் ஏரி நீரின்றி வறண்டு கிடந்தது. சென்ற ஆண்டு வண்டல் மணல் எடுப்பதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் அனுமதி வாங்கி மணல் எடுத்து விற்பனை செய்து மணல் குவாரியாக செயல்படுத்தினர். இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் புகார் குவிந்ததாலும் அந்தநேரத்தில் சில நாட்கள் மழை பெய்ததாலும் அந்த பணி தடைபட்டது.

ஆனால் ஏரி முழுவதும் மணல் வியாபாரிகளால் கொத்தும் குதறிய நிலைக்கு தள்ளப்பட்டு ஏரியின் இயற்கை அழகு வீணாகியது. இருந்தும் மழை பெய்ததாலும் காவிரி நீர் பாமணி ஆற்றிலிருந்து வந்ததாலும் தண்ணீர் நிரம்பி வழிந்து கிடந்தது. இதனால் அப்பகுதி மக்கள் நமது பகுதிக்கு நீராதாரம் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்தனர். இந்த நிலையில் சில மாதங்களாக இப்பகுதியில் வெயிலால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. பல நீர் நிலைகள் வற்றி வறண்டுபோன நிலையில் இந்த மங்கலூர் ஏரியில் மட்டும் தண்ணீர் காணப்பட்டது. இதனை முத்துப்பேட்டை மற்றும் சுற்றுபகுதி மக்கள் பல்வேறு தேவைக்கு பயன்படுத்தி வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கும், மிகவும் பயனுள்ளதாக இருந்தது வருகிறது.

இதற்கிடையே கடந்த சிலநாட்களாக அப்பகுதியை சேர்ந்த செல்வேந்தர்கள் தங்களது தென்னந்தோப்புகளுக்கு டீசல் இன்ஜின் வைத்து இரவு பகலாக தங்களது தேவைக்கு அதிகமாகவே இறைத்து தண்ணீரை வீண்விரயம் செய்து வருகின்றனர். இதனால் தற்பொழுது அந்த ஏரி தண்ணீர் வற்றி வரண்டு வருகிறது. பல்வேறு வகையில் மக்களுக்கு பயனாக இருந்த இந்த தண்ணீர் இப்பகுதியை சேர்ந்த சிலரால் வீண்விரயம் செய்யப்பட்டு வருகிறது. ஏரி தண்ணீரை வீண்விரயம் செய்யப்படுவதை தடுத்து நிறுத்தி பாதுக்காக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை. இதனால் வேதனையடைந்த இப்பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறுகையில்,  மங்கல் ஏரிக்கு நீர் வரும் வாய்க்கால் மட்டும் 70அடி அகலம் கொண்டதாகும். பெருகவாழ்ந்தான் வாய்க்கால் வழியாக திறந்துவிடப்படும் மழைவெள்ளநீர் மங்கல் பிள்ளையாரடி அருகே ஏரியை வந்தடைகிறது. அதேபோன்று ஏரியிலிருந்து வெளியேறும் நீர்வழிப்பாதையும் 70 அடி அகலத்தை கொண்டதாகும். தற்போதைய நிலையில் வாய்க்கால்கள் பத்தடி அகலத்துக்குள் சுருங்கிவிட்டன.
மேலும் அதிகாரிகளின் கண்காணிப்பின்மையால் 54ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஏரியானது 30ஏக்கராக சுருங்கிவிட்டது. இதனால் ஏரியின் நீர் கொள்ளளவும் குறைந்து விட்டது. விவசாய பயன்பாட்டுக்கும் பற்றாக்குறையுடனேயே பாசனநீர் கிடைத்து வந்தது. இந்நிலையில் இந்த ஏரியில் இப்பகுதி மக்களுக்கு பயனாக இருக்கும் தண்ணீரை இப்பகுதி சுயநலவாதிகள் தங்களது தேவைக்கு மீறி இறைத்து வீண்விரயம் செய்கின்றனர். புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை. இனியாவது உரிய அதிகாரிகள் ஏரி நீரை இறைத்து விரயம் செய்வதை தடுத்து நிறுத்திட வேண்டும் . மாவட்ட கலெக்டர் மக்கள் நலன்கருதி நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

Tags : lake ,Muthupet ,
× RELATED தேக்கடி ஏரியை நீந்தி கடந்த புலி படகு சவாரியில் பார்த்து ரசித்தனர்