×

விலை உயர்ந்து வருவதால் உளுந்து சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் 30 ஆயிரம் ஏக்கர் இலக்கு

கும்பகோணம், ஏப். 25: விலை உயர்ந்து வருவதால் கும்பகோணம் பகுதியில் உளுந்து சாகுபடியில் விவசாயிகள் ஆர்வமாக இறங்கியுள்ளனர். 30 ஆயிரம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.உளுந்து சாகுபடிக்கு அதிகளவில் தண்ணீர் தேவையில்லை. இதனால் விவசாயிகள் சம்பா அறுவடைக்கு முன்பு உளுந்து விதை தெளித்து விடுவர். தற்போது கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் சித்திரை பட்டத்துக்கான உளுந்து சாகுபடி மும்முரமாக நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட அனைத்து பகுதியில் கடந்தாண்டை விட இந்தாண்டு 50 சதவீதம் அதிகமாக உளுந்து சாகுபடி செய்துள்ளனர்.2 ஆண்டுக்கு முன் உளுந்து உரிய விலைக்கு போகாததால் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. கடந்தாண்டு விலை உயர்ந்ததால் தஞ்சை மாவட்டத்தில் 15,000 ஏக்கரில் உளுந்து சாகுபடி செய்திருந்தனர். உளுந்தின் விலை உயர்வால் இந்தாண்டு தஞ்சை மாவட்டத்தில் 30,000 ஏக்கரில் சாகுபடி செய்துள்ளனர்.

இதுகுறித்து வேளாண்மை  துறை அதிகாரி கூறுகையில், கடந்த சில ஆண்டுகள் வரை தஞ்சை மாவட்டத்தில் 15,000 ஏக்கர் உளுந்து சாகுபடி செய்யப்பட்டது. இந்தாண்டு 30,000 ஏக்கரில் உளுந்து சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அனைத்து பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விதை தெளித்துள்ளனர். 100 நாட்களுக்கு பிறகு உளுந்து பறித்து விற்பனை செய்வர்.கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவோணம், ஒரத்தநாடு, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மதுக்கூர் உள்ளிட்ட பகுதி விவசாயிகளுக்கு இதுவரை 530 டன் உளுந்து விதை வழங்கப்பட்டுள்ளது. தற்போது சீதோஷ்ணம் மாற்றம் காரணமாக உளுந்து செடியில் பூச்சி தாக்குதல் உள்ளது. அதனால் பெருமளவு பாதிப்பில்லை. உளுந்து விவசாயிகள் உடனடியாக வேளாண்மைத்துறை அலுவலர்களை அழைத்து வந்து காண்பித்து உரிய மருந்து தெளித்து கொள்ள வேண்டும் என்றார்.

இதுகுறித்து உளுந்து விவசாயியான இணைபிரியாள்வட்டத்தை சேர்ந்த இளம்பரிதி கூறுகையில், கோடை அறுவடைக்கு பிறகு வயலுக்கு உரம் சேர்ப்பதற்காக சித்திரை பட்டத்துக்கான உளுந்து பயிரிட்டுள்ளோம். தற்போது கடுமையான வெயில் அடிப்பதால் உளுந்து செடியின் இலைகளில் பூச்சி அரித்து துளை விழுந்துள்ளது. இப்பகுதியில் 1,000 ஏக்கருக்கு மேல் உளுந்து சாகுபடி செய்துள்ளோம். எனவே வேளாண்மைத்துறை அலுவலர்கள் வயலுக்கு சென்று பார்வையிட்டு பூச்சிகளை தாக்காத வகையில் உரங்கள் தெளிப்பது குறித்து ஆலோசனை வழங்க வேண்டும்.
மேலும் உரங்களை வேளாண்மைத்துறை மூலம் மானியத்தில் வழங்க வேண்டும் என்றார்.

Tags :
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா