×

கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து தேமுதிக பிரமுகர் மீது வாட்ஸ்அப்பில் அவதூறு நடவடிக்கை கோரி மனு

மயிலாடுதுறை, ஏப்.25: நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகர தேமுதிக செயலாளராக பண்ணைபாலு என்பவர் இருந்து வருகிறார். அவர் இறந்து விட்டதாக போஸ்டர் தயார் செய்து முகநூலில் பதிவு செய்துள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை டிஎஸ்பியிடம் பண்ணைபாலு மனு ஒன்றை அளித்துள்ளார். அம்மனுவில் தெரிவித்திருப்பதாவது: நான் கடந்த 23ம்தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது எனக்கு கைபேசியில் அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. அதனை எடுத்து பேசிய எனது சகோதரர் கலக்கத்துடன் என்னை நலம் விசாரித்தார். பலர் இன்று காலை 5 மணி அளவில் எனது வீட்டுக்கு வந்து நேரடியாக என்னை பார்த்து கைபேசியில் வந்த முகநூலில் இணையதளத்தை திறந்து காண்பித்தார். அதில் டெல்டா திவாகர் என்ற பெயரிலிருந்து காலை சுமார் 4.30 மணிக்கு நான் இறந்து விட்டதாக தெரிவித்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து பதிவிட்டு வருகின்றனர். எனது பெயருக்கும், நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் சமூக விரோதிகள் சேர்ந்து இந்த போஸ்டரை முகநூலில் பதிவிட்டு பரப்பியுள்ளனர். நான் சார்ந்துள்ள அரசியல் இயக்கத்தின் பெயரிலேயே மாப்பிங் செய்து முகநூலில் பதிவு உள்ளது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
× RELATED குத்தாலம் அருகே மருத்தூரில் மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா