×

மயிலாடுதுறை அருகே முதியவருக்கு ஓராண்டாக நீடித்த உதவித்தொகை பிரச்னை தீர்ந்தது

மயிலாடுதுறை, ஏப்.25:  மயிலாடுதுறை அருகே முதியவருக்கு ஒரு வருடமாக நீடித்து வந்த முதியோர் உதவித்தொகை பிரச்னை தீர்ந்தது.    
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த அடியாமங்கலத்தில் வசித்து வருபவர் தம்புசாமி(67). எந்த ஆதரவு இல்லாத இவர் தனக்கு உதவித்தொகை வேண்டும் என்று அரசிடம் மனுக்கள் மேல் மனுக்கள் போட்டு சளித்துவிட்டார்.  பல ஆண்டுகளுக்கு பிறகு சென்ற ஆண்டு 2018 ஜனவரி மாதம் இவருக்கு முதியோர் உதவித்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாதாமாதம் ரூ.1000 வரப்போகிறது என்று காத்திருந்தார். ஆனால் வரவில்லை. இருப்பினும் மேலும் ஓர் மனு செய்தார். அந்த மனு விசாரணைக்கு வந்தபோது தம்புசாமி ஏற்கனவே மாத உதவித்தொகை வாங்கிக்கொண்டிருப்பதால் அவருக்கு உதவித்தொகை வழங்க இயலாது என்று மனுவை திருப்பி அனுப்பி விட்டனர். மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் சென்று கேட்டதற்கு நீங்கள் பணம் வாங்கிக் கொண்டிருப்பதாக வங்கியிலிருந்து தகவல் வந்துள்ளது என்று கூறியுள்ளனர். அவர் வங்கிக்கு சென்று கேட்டபோது அவரது வங்கி பாஸ்புத்தகத்தை வாங்கி பதிவு செய்தால் அதில் மாதா மாதம் தொடர்ச்சியாக 14 மாதம் ரூ.1000 வங்கியிலிருந்து எடுத்துள்ளது ஆதாரத்துடன் தெரியவந்தது.

நான் பணத்தை எடுக்காமல் யார் எடுத்தது என்ற செய்தி கடந்த 4ம்தேதி தினகரன் நாளிதழில் வெளியானது. இதுகுறித்து மயிலாடுதுறை நலிந்தோர் நலத்திட்ட தாசில்தார் நாகலட்சுமி விசாரணை செய்ததில் இரண்டு தம்பு சாமி விண்ணப்பம் செய்திருந்ததில் ஒருவருக்கு மட்டும் முதியோர் உதவித்தொகை ஒதுக்கப்பட்டு அனுமதி கடிதம் வழங்கப்பட்டுள்ளது. தவறுதலாக முதியோர் உதவித்தொகைக்கு அனுமதி கிடைக்காத வேறு ஒரு தம்புசாமிக்கு கடந்த 14 மாதமாக உதவித்தொகையை வாங்கியுள்ளது தெரியவந்தது. உடனே உரிய நபரான பாதிக்கப்பட்ட நபருக்கு மாதாமாதம் உதவித்தொகை வழங்க வங்கி நிர்வாகத்தை கேட்டுக் கொண்டதன்பேரில் ஏப்ரல் மாத உதவித்தொகை மே மாதம் முதல் வாரத்திலிருந்து வாங்கிக் கொள்ளாம் என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தனக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுத்த தாசில்தாருக்கும் இந்த செய்தியை வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் தனது நன்றியை தெரிவித்த தம்புசாமி, எனக்காக வழங்கப்பட்ட தொகை ரூ.14 ஆயிரத்தையும் அரசு அதிகாரிகள் பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

Tags : Mayiladuthurai ,elderly ,
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...