மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால் பச்சிளம் சிசு கொலை செய்து எரிப்பு? பெற்றோர், உறவினர்கள் மீது வழக்கு

திருவண்ணாமலை, ஏப்.25: மூன்றாவதும் பெண் குழந்தையாக பிறந்ததால், பச்சிளம் சிசுவை கொலை செய்து எரித்ததாக, பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா என்ற செல்வம். கூலித்தொழிலாளி. இவரது மனைவி விமலா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிைலயில், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த விமலாவுக்கு, கடந்த 17ம் தேதி மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. டாக்டர்கள் முறைப்படி ‘டிஸ்சார்ஜ்’ செய்து அனுப்பும் முன், அன்று இறவே மருத்துவமனையில் இருந்து குழந்தையுடன் விமலா, அவரது கணவர், உறவினர்கள், பச்சிளம் சிசுவுடன் மாயமானார்கள். இதனால் டாக்டர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து கலெக்டர் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், உரிய விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார்.

விசாரணையில், விமலா கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அடுத்த வெள்ளைக்குட்டை கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் தங்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து விமலாவின் கணவர் ராஜாவை அழைத்து வந்து, திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் நேற்று விசாரணை நடத்தினர். அதேபோல், சிங்காரப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைந்து சென்று விமலாவையும் விசாரித்தனர். அப்போது, ராஜா கடந்த 17ம் தேதி மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததாகவும், அன்று இரவு குழந்தை இறந்துவிட்டதால் மருத்துவமனையில் இருந்து வெளியேறி சிங்காரப்பேட்டை வெள்ளக்குட்டையில் இறந்த குழந்தையின் உடலை எரித்து, குட்டையில் கரைத்துவிட்டதாக தெரிவித்தார். கணவன், மனைவியிடம் தனித்தனியே நடத்திய விசாரணையில், முன்னுக்கு பின் முரணான தகவல்கள் தெரியவந்ததால், போலீசார் சந்தேகம் அடைந்தனர். பெண் சிசு கொலை கொல்லப்பட்டதா? அல்லது இறந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் எரித்துவிட்டனரா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிைலையில் பச்சிளம் பெண் சிசு இறந்த தகவலை தெரிவிக்காமல் மறைத்ததாக, குழந்தையின் பெற்றோர் ராஜா, விமலா மற்றும் விமலாவின் பெற்றோர் மீது கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், திருவண்ணாமலையில் விசாரணை நடத்தப்பட்ட ராஜாவை, சிங்காரப்பேட்டை போலீசாரிடம் நேற்று ஒப்படைத்தனர். இது தொடர்பாக, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில், பெண் சிசு கொலை நடப்பதை தடுக்க பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சிையயும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories:

>