சென்னையில் இருந்து 1381 கிலோ தங்கம் கொண்டுவரப்பட்ட விவகாரம்: முதன்மை செயலாளர் எச்சரிக்கை.... வங்கி, தேவஸ்தான அதிகாரிகள் அலட்சியமாக இருந்திருக்கக்கூடாது

திருமலை, ஏப்.25: சென்னையில் இருந்து 1381 கிலோ தங்கம் கொண்டுவரப்பட்ட விவகாரத்தில் வங்கி, தேவஸ்தான அதிகாரிகள் அலட்சியமாக இருந்திருக்கக்கூடாது என்று முதன்மை செயலாளர் எச்சரிக்கை விடுத்தார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்கத்தில் 1,938 கிலோ இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும், 5,387 கிலோ தங்கம் பாரத ஸ்டேட் வங்கியிலும், 1,381 கிலோ தங்கம் பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இது தவிர திருமலை திருப்பதி தேவஸ்தான கருவூலத்தில் 553 கிலோ தங்கம் உள்ளது. மொத்தம் தேவஸ்தானத்திடம் 9,259 கிலோ தங்கம் இருப்பு உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 1,311 கிலோ தங்கம் 3 ஆண்டு காலத்தில் 1.75 சதவீதம் வட்டியுடன் மீண்டும் தங்கமாக பெறும் விதமாக முதலீடு செய்யப்பட்டது. மூன்றாண்டு காலக்கெடு கடந்த 18ம் தேதியுடன் நிறைவு பெற்றது. வட்டியாக கிடைத்த 70 கிலோ தங்கத்துடன் சேர்த்து மொத்தம் 1,381 கிலோ தங்கத்தை பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சென்னையில் இருந்து திருப்பதிக்கு கொண்டு வரும்போது தேர்தல் அதிகாரிகள் அதனை பிடித்தனர்.

இதையடுத்து கடந்த 19ம் தேதி உரிய ஆவணங்களை வழங்கி திருமலை திருப்பதி தேவஸ்தான கருவூலத்திற்கு பத்திரமாக 1,381 கிலோ தங்கத்தை கொண்டு வந்தனர். இந்நிலையில், சென்னையில் இருந்து கொண்டுவரப்பட்ட 1381 கிலோ தங்கத்தை பாதுகாப்பாக கொண்டுவராத விவகாரத்தில் யாருடைய அலட்சியம் இருந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க முதன்மை செயலாளர் எல்.வி.சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.
அதன்படி, மாநில வருவாய் மற்றும் இந்து அறநிலையத் துறை செயலாளர் மன்மோகன் சிங் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை செய்து அறிக்கையை சமர்ப்பித்தனர். இதுகுறித்து முதன்மை செயலாளர் எல்.வி. சுப்பிரமணியம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்கத்தை சென்னையில் இருந்து கொண்டுவருவதில் இருந்த அலட்சியம் மற்றும் அதன் மீதான விவாதங்கள் குறித்து விசாரணை செய்வதற்காக செயலாளர் மன்மோகன் சிங் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழு அறிக்கையை சமர்ப்பித்தனர். இந்த அறிக்கை முதல்வரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தங்கத்தைக் கொண்டு வந்ததில் அலட்சியம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விலை மதிப்பு மிக்க தங்கத்தை கொண்டு வரும் நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி அதிகாரிகள் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் இந்த விவகாரத்தில் இவ்வளவு அலட்சியமாக இருந்திருக்கக் கூடாது. ஏழுமலையான் கோயில் தங்கம் பக்தர்களின் மனநிலையுடன் இணைந்தது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அரசு அதிகாரிகளுடன் முதன்மை செயலாளர் ஆய்வு நடத்துவது குறித்து சர்ச்சையாகிவருகிறதே என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு முதன்மை செயலாளர் எல்.வி.சுப்பிரமணியம் கூறும்போது, அரசு முதன்மை செயலாளராக துறை வாரியாக ஆய்வு நடத்தியதில் என்ன தவறு உள்ளது? தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்த பிறகு அரசியல் கட்சியினர் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும். இதுகுறித்து தேர்தல் ஆணையம் திட்டவட்டமான நிபந்தனைகளை விதித்துள்ளது என்றார்.

Tags : Chennai ,Bank ,Devastani ,
× RELATED சிங்கப்பூரில் இருந்து கடத்தி...